யாழ் சர்வதேச விமான நிலையம் ஊடாக பயணிப்போருக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு!

இரத்மலானை மற்றும் யாழ். சர்வதேச விமான நிலையங்களில் இருந்து புறப்படும் ஒவ்வொரு நபரிடமும் அறவிடப்படும் விலகல் வரி, 50 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சின் வரி ஆலோசகர் தனுஜா பெரேரா தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, குறித்த விமான நிலையத்திலிருந்து புறப்படும் நபர்களுக்கு 60 அமெரிக்க டொலர்களில் இருந்து அறவிடப்பட்ட விலகல் வரி 30 டொலர்களாக குறைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இரத்மலானை விமான நிலையத்திலிருந்து வெளியேறும் நபருக்கு அறவிடப்படும் விலகல் வரி மார்ச் மாதம் 26ஆம் திகதி வரையிலும், யாழ் விமான நிலையத்திலிருந்து வெளியேறும் நபருக்கு விதிக்கப்படும் விலகல் வரி ஜூலை மாதம் 11ஆம் திகதி வரையிலும் செல்லுபடியாகும் வகையில் திருத்தப்பட்டுள்ளது.
இரத்மலானை மற்றும் யாழ். விமான நிலையங்களுக்கு மாத்திரம் விலக்கு வரியை திருத்தியமைக்கும் வர்த்தமானியை நிதியமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickremesinghe) வெளியிட்டுள்ளதாக தனுஜா பெரேரா மேலும் தெரிவித்துள்ளார்.
மத்தள, இரத்மலானை, யாழ். சர்வதேச விமான நிலையத்தைத் தவிர வேறு விமான நிலையத்திலோ அல்லது கடல் வழியிலோ புறப்படும் எவரும் 60 டொலர் விலகல் வரி செலுத்த வேண்டும் என ஜனாதிபதியின் வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.