இனி இசையமைப்பாளர்களுக்கு வேலை இருக்காது.. அதிரடி ரகசியத்தை கூறிய யுவன் சங்கர் ராஜா
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் யுவன் சங்கர் ராஜா. இளையராஜாவின் மகனான இவர் 1997ல் அரவிந்தன் எனும் படத்தின் மூலம் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமானார்.
ஆனால், ஆரம்பகாலகட்டத்தில் சில திரைப்படங்கள் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தரவில்லை. அதன் பின், அஜித் நடிப்பில் வெளிவந்த தீனா திரைப்படத்தின் மூலம் யுவன் ஷங்கர் ராஜா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
இப்படம் இவர் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. இதை தொடர்ந்து, பல படங்களில் இசையமைக்கும் வாய்ப்பை பெற்றார்.
இந்நிலையில், ஏ.ஐ தொழில்நுட்பம் தற்போது இருக்கும் காலகட்டத்தில் என்னவெல்லாம் செய்கிறது என்பதை குறித்து யுவன் சங்கர் ராஜா பேசியுள்ளார்.
அதில், “சமீப காலமாக ஏ.ஐ தொழில்நுட்பம் பெரிதும் வளர்ந்து வந்துள்ள நிலையில், போட்டோக்கள், வீடியோக்களை ‘எடிட்’ செய்வது மட்டுமில்லாமல் தற்போது சினிமா துறையிலும் பாடல்கள், கதாபாத்திரங்கள் போன்ற பலவற்றை ஏ.ஐ தொழில்நுட்பம் உதவியால் உருவாக்க முடிகிறது.
அதனால், இன்னும் 5-10 வருடங்களில் இசையமைப்பாளர்களுக்கே வேலை இருக்காது. ஆனால், இசை மூலம் மனிதர்கள் கொடுக்கும் உணர்வை ஏ.ஐ தொழிநுட்பத்தால் கொடுக்க முடியாது என்று ஏ.ஆர்.ரகுமான் கூறியது உண்மை தான்” என்று கூறியுள்ளார்.
மேலும், யுவன் இசையமைப்பில் சமீபத்தில் வெளியான GOAT படத்தில் இடம்பெற்ற ‘சின்ன சின்ன கண்கள்’ பாடலில் ஏ.ஐ. மூலம் மறைந்த பாடகி பவதாரணியின் குரல் பயன்படுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.