உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
உயிர் அச்சுறுத்தலால் பதவி விலகிய அதிகாரி

இலங்கை தேசிய மருந்துகள் ஒழுங்குப்படுத்தல் அதிகாரசபையின் தலைமை நிறைவேற்று அதிகாரியாக பதவி வகித்து வந்த வைத்திய நிபுணர் சவீன் செமகே, உயிருக்கு ஏற்பட்ட அச்சுறுத்தல்களை காரணமாகக் கொண்டு தனது பதவியில் இருந்து விலகியுள்ளதாக அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
மே 9ஆம் திகதி இரவு 11.30 மணி முதல் நள்ளிரவு வரை, சவீன் செமகேவின் இல்லத்தின் சுற்றுவட்டாரத்தில் இருவர் தொடர்ந்தும் சுற்றித்திரிந்துள்ளனர். அவர்களின் நடமாட்டங்கள் மற்றும் படுக்கையறையின் சாளரத்தில் எட்டிப்பார்த்த சம்பவங்கள் வீட்டில் உள்ள சிசிரிவி கேமராவில் பதிவாகியுள்ளன.
சவீன் செமகே மே 17ஆம் திகதி சனிக்கிழமையன்று, அவரது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி அதிகார சபையின் தலைமைப் பதவியை விலக்கிக் கொண்டார். குறித்த சம்பவம் தொடர்பாக தமக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை என்பதோடு, சம்பவத்தில் ஈடுபட்ட சந்தேக நபர்கள் இன்னும் கைது செய்யப்படாத நிலையிலும் அவர் பதவியிலிருந்து விலகினார்.
2021 ஆம் ஆண்டு முதல் 2022 மே மாதம் வரை அவர் இதே பதவியில் இருந்த நிலையில், முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுடனான கருத்து முரண்பாடுகள் காரணமாக பதவியை இராஜினாமா செய்தார். பின்னர், மருந்து கொள்முதல் முறைகேடுகள் தொடர்பான சர்ச்சைகளுக்குப் பிறகு அமைச்சர் பதிலாக நியமிக்கப்பட்ட ரமேஷ் பத்திரண அவரை மீண்டும் பதவிக்கு அழைத்தார்.
2024 ஜனவரி மாதம் முதல் மீண்டும் தலைமை நிறைவேற்று அதிகாரியாகச் செயற்பட்டு வந்த சவீன் செமகே, மருந்து ஒழுங்குமுறை, தர நியமனங்கள் உள்ளிட்டவற்றில் பல சீர்திருத்த நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
சம்பவத்துடன் தொடர்புடைய இருவரையும் கைது செய்யும் பணியில் பொலிஸார் ஈடுபட்டுள்ளதுடன், சவீன் செமகேவின் பாதுகாப்பு தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.