எட்டு நாட்களாக உயிருக்கு போராடிய யானை உயிரிழப்பு; பிரதேசவாசிகள் கவலை
மட்டக்களப்பு, கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மஜ்மா நகரில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த யானை ஒன்று நேற்று (23) மாலை உயிரிழந்த சம்பவம் பிரதேசவாசிகளை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
ஓட்டமாவடி – மஜ்மா நகர் கொவிட் மையவாடியை அண்மித்த பகுதியில் கடந்த 16 ஆம் திகதி யானை ஒன்று திடீரென நோய்வாய்ப்பட்ட நிலையில் எழும்ப முடியாத நிலையில் விழுந்து கிடந்துள்ளது.
இந்நிலையில், யானைக்கு சிகிச்சையளிக்க அம்பாறை பகுதியிலிருந்து வனவிலங்கு திணைக்கள வைத்தியர் குழுவினர் வருகை தந்து சிகிச்சையளித்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி யானை எட்டு நாட்களின் பின்னர் நேற்றையதினம் உயிரிழந்துள்ளது.
யானையை காப்பாற்றுவதற்காக அதற்கு நீர் ஊற்றி உணவு வழங்கும் நடவடிக்கைகளில் பிரதேச சமூக செயற்பாட்டாளர்கள் ஈடுபட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.