கொழும்பில் தரமற்ற உணவு பொருட்கள் விற்பனை – மக்களுக்கு எச்சரிக்கை
பண்டிகை காலத்தை அடிப்படையாக வைத்து, வாடிக்கையாளர்களை ஏமாற்றி, தரமற்ற உணவுப் பொருட்கள் உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்யும் வகையில், சில மோசடி விற்பனையாளர்கள் தொடர்ந்து செயற்பட்டு வருகின்றனர்.
இவ்வாறான கடைகளில் கொழும்பு மாநகர சபையினால் விசேட பரிசோதனை ஒன்று மேற்கொள்ளப்பட்டது. அங்கு சட்டத்தை மீறிய 11 பேர் கண்டுபிடிக்கப்பட்டதுடன், அவர்களுக்கு எதிராக வழக்குத் தொடர பொதுச் சுகாதார பரிசோதகர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
பண்டிகை காலத்தை முன்னிட்டு கொழும்பு மாநகரசபையின் பொது சுகாதார பரிசோதகர்களினால் கொழும்பு புறக்கோட்டை பகுதியில் விசேட சுற்றிவளைப்பு வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
அங்கு அத்தியாவசிய உணவு பொருட்கள் மற்றும் உலர் பழங்கள் விற்பனை செய்யும் 178 மொத்த விற்பனை கடைகளில் சிறப்பு சோதனை நடத்தப்பட்டது.
குறித்த ஆய்வுகளின் போது, கொழும்பு 4ஆம் குறுக்குத் தெரு உள்ளிட்ட பகுதிகளில் 250 கிலோவிற்கும் அதிகமான உலர் பழங்கள் மனித பாவனைக்குத் தகுதியற்றவை என கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், பொதுசுகாதார பரிசோதகர்கள் அதிகளவிலான மரக்கறிகள், பழங்கள் மற்றும் உணவுப்பொருட்கள் என்பன மனித பாவனைக்கு தகுதியற்றவை என கண்டறியப்பட்டுள்ளது.
இவ்வாறு கண்டெடுக்கப்பட்ட முட்டைகள், காய்கறிகள், பழங்கள் என்பன பொதுப் பரிசோதகரால் அழிக்கப்பட்டன.
தரமற்ற உணவுப் பொருட்கள் உள்ளிட்ட பொருட்களை மக்களுக்கு விற்பனை செய்து மோசடி செய்த கடை உரிமையாளர்கள், வர்த்தகர்கள் உட்பட 11 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் இது போன்ற விசாரணைகளை முன்னெடுப்பதாகவும் கொழும்பு பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்