வவுனியாவில் உளுந்து செய்கை முற்றாக அழிவு: விவசாயிகள் கவலை

வவுனியாவில் (Vavuniya) கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக உளுந்துச் செய்கை முற்றாக அழிவடைந்துள்ளதாக விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.
தெற்கு ஆசியாவை பூர்வீகமாக கொண்டது உளுந்து செய்கை என்றும் இலங்கையில் விளைவிக்கப்படும் தானியங்களில் உளுந்தும் முக்கியமானது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதன்படி உளுந்து செய்கையானது வடக்கில் அதிகமாக மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் அதற்கான கேள்வியானது அதிகமாக காணப்படுவதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் கடன்பட்டும், நகைகளை அடைவு வைத்தும் செட்டிகுளம், ஓமந்தை, பாவற்குளம், சூடுவெந்தபுலவு, நெடுங்கேணி, சிப்பிக்குளம், பறநாட்டாங்கல் என பல பகுதிகளிலும் உளுந்து செய்கையில் விவசாயிகள் ஆர்வத்துடன் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், 2024-2025 ஆம் ஆண்டு காலப் பகுதியில் பெரும் போகத்தில் 5650 ஹெக்டேயர் அளவில் வவுனியாவில் உளுந்து செய்கை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இருப்பினும் சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட வெள்ளத்தினாலும், நோய் தாக்கத்தினாலும் இம்முறை உளுந்து செய்கையாளர்கள் பலர் பாதிப்படைந்துள்ளதுடன் பயிர் செய்கைக்கு செலவு செய்த பணத்தைக் கூட பெற்றுக் கொள்ள முடியாத நிலையில் உள்ளதாகவும் கவலை வெளியிட்டுள்ளனர்
உளுந்து அறுவடைக்கு தயாரக இருந்த வேளை வவுனியாவில் தொடர்ச்சியாக கனமழை பெய்தமையால் உளுந்து செடிகளிலேயே முளைத்து விட்டது.
இதனால் அதனை அறுவடை செய்ய முடியாத நிலையில் தமது செலவீனத்தைக் கூட மீளப் பெற முடியாதவாறு விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உளுந்து 100 வீதம் அழிவடைந்துள்ள நிலையில் தமக்கான நஷ்ட ஈட்டை அரசாங்கம் வழங்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.