102 நாடுகளுக்கு பல நூறு தொன் பேரீச்சம்பழங்களை வழங்கவுள்ள சவூதி அரேபியா

மன்னர் சல்மான் அவர்களின் பரிசாக வழங்கப்படும் பேரீச்சம்பழ வழங்கல் திட்டத்தின் ஒரு பகுதியாக எதிர்வரும் ரமழான் மாதத்தை முன்னிட்டு, சவூதி அரேபியா 102 நாடுகளுக்கு 700 தொன் பேரீச்சம்பழங்களை வழங்கவுள்ளது.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இம்முறை 200 தொன் பேரீச்சம்பழங்கள் அதிகமாக வழங்கப்பட உள்ளது, மேலும் இந்த நன்கொடைத் திட்டமானது உலகளாவிய முஸ்லிம் சமுதாயத்திற்கான சவூதி அரேபியாவின் ஆதரவையும் உதவியையும் வலுப்படுத்துவதாக அமைகிறது.
இத்திட்டம் சவூதி அரேபியாவின் இஸ்லாமிய விழுமியங்களை பரப்புவதை, சமாதானத்தை ஊக்குவிப்பதை மற்றும் தீவிரவாதத்தையும் மதத்தீவிரவாதத்தையும் எதிர்க்க உதவுவதாக அந்நாட்டு அமைச்சர் ஷேக் அப்துல்லதீப் பின் அப்துல் அஸீஸ் அல்-ஷேக் குறிப்பிட்டுள்ளார்.
பொருத்தமான நேரத்தில் மக்கள் மத்தியில் விநியோகிப்பதற்கு பேரீச்சம்பழங்கள் அனுப்புவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவடைந்துள்ளதாகவும், இது ரமழான் காலத்தில் லட்சக்கணக்கான முஸ்லிம்களுக்கு உதவுவதாக இருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கைக்கும் சமீபத்தில் 50 தொன் உயர்ரக சவூதி பேரீச்சம்பழங்கள் வழங்கப்பட்டுள்ளன. இது இரு நாடுகளுக்கிடையேயான உறவினை வலுப்படுத்துவதோடு, இலங்கையின் முஸ்லிம் சமுதாயத்திற்கு சவூதி அரேபியாவின் தொடர்ச்சியான ஆதரவுக்கும் சான்றாக அமைகிறது.