இலங்கைக்கான புதிய கடன் தொடர்பில் ஜப்பானின் நிபந்தனை
இடைநிறுத்தப்பட்ட திட்டங்களை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதை பொறுத்தே, இலங்கைக்கு எந்தவொரு புதிய கடன்கள் குறித்தும் பரிசீலிக்கப்படும் என்ற நிலைப்பாட்டை ஜப்பான் (Japan) எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இருதரப்புக் கடன் மறுசீரமைப்பு வெற்றிகரமாக முடிவடைந்ததை அடுத்தே ஜப்பான் இவ்வாறு தீர்மானித்துள்ளது.
மேலும், ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி இலங்கையில் இடைநிறுத்தப்பட்ட ஜப்பானின் அனைத்து திட்டங்களையும் மீள ஆரம்பிப்பது குறித்து கலந்துரையாடினார்.
எனினும், ஆவணங்கள் மற்றும் ஏனைய பணிகள் முடிந்ததும் இந்தத் திட்டங்களை மீண்டும் ஆரம்பிக்க ஜப்பான் ஆர்வமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொருளாதார நெருக்கடி காரணமாக, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் விரிவாக்கம் உட்பட ஜப்பான், சர்வதேச ஒத்துழைப்பு அமைப்பான ஜெய்க்காவின் கீழ் 12 திட்டங்களை நிறுத்தியுள்ளது.
எவ்வாறாயினும், தடைப்பட்ட திட்டங்களை வெற்றிகரமாக நடைமுறைபடுத்துவது குறித்து நம்பிக்கை கொள்ளும் வரை இலங்கையில் புதிய கடன் திட்டங்களை ஆரம்பிக்க ஜப்பான் தயாராக இல்லை என்று தெரிய வருகிறது.
முன்னதாக, கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa) அரசாங்கத்தால் இரத்து செய்யப்பட்ட இலகு தொடருந்து திட்டமே (எல்.ஆர்.டி) ஜப்பானுடன் கருத்து வேறுபாடுகளுக்கு காரணமாக அமைந்திருந்தது.2020இல் 1.5 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான தொடருந்து திட்டத்தில் இருந்து இலங்கை வெளியேறியது.
எனினும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe), ஜப்பானிய உதவியுடன் இந்த திட்டத்தை ஆரம்பிக்க விருப்பம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.