பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு புதிய சுற்றறிக்கை
அரசாங்கத்தின் முக்கிய பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு புதிய சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களின் தேர்தல் பிரசார விளம்பரங்கள், சுவரொட்டி கட்அவுட்கள் போன்றவற்றை காட்சிப்படுத்துவதற்கு இடமளிக்கக்கூடாது, தேர்தல் அமைச்சின் செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட அரசாங்கத்தின் முக்கிய பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளுக்கு ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க அறிவித்துள்ளார்.
அரசு அலுவலகங்கள், கட்டிடங்கள், பாடசாலைகள், அரசுக்கு சொந்தமான பிற கட்டடங்கள், சுற்றுலா இல்லங்கள் போன்றவையும் அரசு வளங்கள் என்பதால், அந்த கட்டடங்களை அரசியல் சந்திப்புகள், விவாதங்கள் போன்றவற்றுக்கு பயன்படுத்தக் கூடாது என்று சம்பந்தப்பட்ட சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அத்துடன், தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்களுக்கு அரசுக்கு சொந்தமான சுற்றுலா இல்லங்கள், விடுதிகள், ஓய்வு விடுதிகள் போன்றவற்றை இலவசமாக வழங்குவது முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது.
மேலும், வாக்குப்பதிவு காலத்தில் முழு நேர அடிப்படையில் குறித்த இடங்களை அரசியல்வாதி, அதிகாரிகள் அல்லது வேறு யாருக்கும் ஒதுக்குவது தவிர்க்கப்பட வேண்டும் என்றும் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.