உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
கொழும்பில் வெற்றிகரமாக நடைபெற்ற நிதியியல் பிராந்திய ஆலோசனைக் கூட்டம்

இலங்கை மத்திய வங்கியின் ஏற்பாட்டில், ஆசியாவுக்கான நிதியியல் உறுதிப்பாட்டுச்சபையின் (Financial Stability Board – FSB) பிராந்திய ஆலோசனைக் குழு கூட்டம், கடந்த வாரம் கொழும்பில் வெற்றிகரமாக நடைபெற்றது.
இந்த ஆலோசனைக் கூட்டம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் முதன்முறையாக இடம்பெற்ற நிலையில், இவ்வாண்டு இரண்டாவது முறையாக மத்திய வங்கியால் ஒருங்கிணைக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க மற்றும் ஹொங்கொங் நாணய அதிகார சபையின் பிரதம நிறைவேற்று அதிகாரி எட்டி யூஈ ஆகியோர் இணைத்தலைமை தாங்கினர்.
அவுஸ்திரேலியா, புருணை தாருஸலாம், கம்போடியா, சீனா, ஹொங்கொங், இந்தியா, இந்தோனேசியா, ஜப்பான், தென்கொரியா, மலேசியா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, வியட்நாம் மற்றும் இலங்கை உள்ளிட்ட நாடுகளின் முக்கிய நிதி அமைப்புகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
அத்துடன், சர்வதேச நாணய நிதியம் (IMF), உலக வங்கி (World Bank) மற்றும் நிதியியல் உறுதிப்பாட்டுச்சபை (FSB) ஆகிய சர்வதேச நிதி நிறுவனங்களின் பிரதிநிதிகளும் முக்கிய உரைகளையும், பரிந்துரைகளையும் வழங்கினர்.
இக்கூட்டத்தின் போது, உலகளாவிய மற்றும் பிராந்திய நிதிசார் சவால்கள், எல்லை கடந்த கொடுப்பனவுகள் தொடர்பான மேம்பாடுகள், வங்கியல்லாத நிதி நிறுவனங்களின் வளர்ச்சி, பிணையமாக்கல் சந்தைகள் தொடர்பான மறுசீரமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு நுட்ப விடயங்கள் விரிவாக கலந்துரையாடப்பட்டன.
பங்கேற்ற நாடுகளின் பிரதிநிதிகள் தங்களது தேசிய அனுபவங்களை பகிர்ந்து கொண்டு, பிராந்திய ரீதியில் இந்நிதியியல் சவால்களை எதிர்கொள்ளும் நவீன வழிமுறைகள் பற்றி ஆலோசனை வழங்கினர்.