உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
கனடா அனுப்புவதாக கூறி யாழ் பெண்ணிடம் லட்சக்கணக்கில் பண மோசடி

யாழ் வடமராட்சி கிழக்கு – கட்டைக்காடு பகுதியில், வெளிநாடு அனுப்புவதாக கூறி குடும்ப பெண்ணிடம் ரூ.27 இலட்சத்து 80 ஆயிரம் மோசடி செய்ததாக கூறப்படும் பெண் ஒருவர், மருதங்கேணி பொலிஸாரின் உதவியுடன் செம்பியன்பற்றில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவது, ரமேஷ் பிரேமா எனும் குடும்ப பெண்ணிடம், தனது கணவரை கனடாவிற்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகளை செய்து தருவதாக கூறி, 2023ஆம் ஆண்டு சந்தேகநபர் குறித்த தொகையை பெற்றுள்ளார். பின்னர் தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டதால், மோசடிக்குள்ளானதை உணர்ந்த பாதிக்கப்பட்டவர், பண பரிமாற்றம் செய்யப்பட்டதற்கான அனைத்து ஆதாரங்களுடன் பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார்.
இதனடிப்படையில், 2024ஆம் ஆண்டு கிளிநொச்சி நீதிமன்றம் சந்தேக நபருக்கு பயணத் தடையும் பிடியாணையும் பிறப்பித்தது.
நள்ளிரவில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், அதே பகுதியில் பலர் இவ்வாறான மோசடிக்குள்ளாகியுள்ளதும் விசாரணைகளில் வெளியானது.
சந்தேகநபரை நாளை (மே 26) கிளிநொச்சி நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மருதங்கேணி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, தன்னிடம் மோசடி செய்யப்பட்ட பெருந்தொகையான பணத்தை மீட்டுத் தருவதற்காக, பாதிக்கப்பட்ட குடும்ப பெண் பொலிஸாரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.