உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
யாழில் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

யாழ்ப்பாணத்தில் பித்தப்பை சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட 37 வயதுடைய பெண் ஒருவர், சிகிச்சை பலனின்றி இன்றைய தினம் (செவ்வாய்க்கிழமை) காலமானார்.
மூத்தநயினார் கோவில் வீதி, நல்லூர், யாழ்ப்பாணம் எனும் முகவரியைச் சேர்ந்த துஷ்யந்தன் நிரோஷா எனப்படும் குடும்பப் பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பெண் ஒருவர் பித்தப்பை கல் பிரச்சனைக்காக கடந்த மே 22ஆம் திகதி தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தொடர்ந்து மே 23ஆம் திகதி அவருக்கு பித்தப்பை அகற்றும் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஆனால், சிகிச்சைக்கு பின்னர் சில மணி நேரங்களில் குறித்த பெண் மயக்க நிலைக்கு சென்றார்.
மேலும் சிகிச்சைக்காக மே 25ஆம் திகதி காலை, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட அவர், தீவிர சிகிச்சை பெறும் போதே இன்று காலை உயிரிழந்தார்.
இது தொடர்பாக திடீர் மரண விசாரணைகளை மரண விசாரணை அதிகாரியான நமசிவாயம் பிறேம்குமார் முன்னெடுத்துள்ளார்.
மேலும், மரணத்தின் சரியான காரணங்களை வெளிக்கொணரும் வகையில் உடற்கூற்று மாதிரிகள் மேலதிக பரிசோதனைக்காக கொழும்பிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.