உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
யாழில் நீண்ட நாட்களாக இடம்பெற்ற துவிச்சக்கர வண்டி திருட்டு முறியடிப்பு

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நீண்ட நாட்களாக பொதுமக்களை அச்சுறுத்திய துவிச்சக்கர வண்டி திருட்டு சம்பவங்களை, யாழ் மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவினர் சிறப்பான நடவடிக்கையின் மூலம் முறியடித்துள்ளனர்.
குருநகர் பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய சந்தேகநபர் ஒருவர், யாழ் மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவின் பதில் கடமை பொறுப்பதிகாரி விஜய ராஜா மற்றும் அவரது குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதானபோது, ஒரு துவிச்சக்கர வண்டி மற்றும் ஹெரோயின் வகை போதைப்பொருள் குறித்த நபரிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலதிக விசாரணையின் போது, கடந்த 23 மாதங்களாக, நல்லூர் மற்றும் யாழ் நகர பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் திருடப்பட்ட, ஆண்கள் பயன்படுத்தும் 5 துவிச்சக்கர வண்டிகள், ,பெண்கள் பயன்படுத்தும் 11 துவிச்சக்கர வண்டிகள் என மொத்தம் 16 வண்டிகள் மீட்கப்பட்டுள்ளன.
இந்த வண்டிகள் அனைத்தும் மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. தற்போது வண்டிகளின் உரிமையாளர்கள் தொடர்பில் தகவல்கள் திரட்டப்படும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
வண்டிகளை இழந்த பொதுமக்கள், தங்கள் உரிமையை உறுதிப்படுத்தும் அடையாள ஆவணங்களை கொண்டு வந்து, தங்களுடைய வண்டிகளை பெற்றுக் கொள்ள யாழ் மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவை அணுகுமாறு போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இந்த நடவடிக்கையால், யாழ்ப்பாணத்தில் அதிகரித்திருந்த வாகன திருட்டு சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.