உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
தேசிய பாதுகாப்பின் வீழ்ச்சி குறித்து எதிர்க்கட்சித் தலைவர் தலைமையில் விசேட கலந்துரையாடல்

நாட்டில் தொடர்ச்சியாக காணப்படும் தேசிய பாதுகாப்பு சீர்கேடு மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு உணர்வின் குறைவு ஆகியவை தொடர்பில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்களின் தலைமையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று (20) காலை, பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இக்கலந்துரையாடலில், கயந்த கருணாதிலக, சிவஞானம் ஸ்ரீதரன், ரவூப் ஹக்கீம், ரிஷாட் பதியுதீன், ரவி கருணாநாயக்க, ஜீவன் தொண்டமான், கே. காதர் மஸ்தான், திலித் ஜயவீர, தயாசிறி ஜயசேகர, ஜே.சி. அலவத்துவல, கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா, பி. சத்தியலிங்கம், நிஸாம் காரியப்பர் உள்ளிட்ட முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
இந்த சந்திப்பின் போது, நாடு முழுவதும் பாதுகாப்பு சூழல் மோசமடைந்துள்ளதைக் கடுமையாக விமர்சித்தனர். பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதோடு, எதிர்க்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்களின் பொதுச் சேவைகள் சுதந்திரமாக மேற்கொள்ள முடியாத நிலை உருவாகியிருப்பது குறித்தும் கவலை தெரிவித்தனர்.
மேலும், சபாநாயகரை சந்தித்து தற்போதைய நிலைமைகள் குறித்து விளக்கியும், எதிர்கட்சியினரின் சுதந்திர செயல்பாடுகளை உறுதிப்படுத்தும் பொறுப்பும் சபாநாயகருக்கு இருப்பதை வலியுறுத்தவும் தீர்மானிக்கப்பட்டது. இதேவேளை, பொலிஸ் மா அதிபர் மற்றும் பிரபுக்கள் பாதுகாப்புப் பிரிவின் பணிப்பாளரை பாராளுமன்றத்திற்கு அழைத்து சந்திக்க வேண்டும் என ஒருமனதாக முடிவெடுத்தனர்.
இதன்படி, எதிர்க்கட்சித் தலைவர்கள் சபாநாயகரைச் சந்தித்து மேற்கண்ட முடிவுகள் மற்றும் யோசனைகளை எழுத்து மூலம் தெரிவித்தனர்.
நாட்டின் தற்போதைய அரசியல் மற்றும் பாதுகாப்பு சூழ்நிலையில், இந்த கலந்துரையாடல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.