உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
இலங்கைக்கு கடத்தப்படவிருந்த பெருந்தொகை ஆபத்தான பொருட்கள் ; மடக்கி பிடித்த இந்திய பொலிஸார்

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 176 கிலோகிராம் கஞ்சா பொதி, தமிழ்நாட்டின் இராமநாதபுரம் மாவட்டத்தில் மண்டபம் அருகிலுள்ள வேதாளை கடற்கரை பகுதியில் இந்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை மாநில போதைப்பொருள் தடுப்பு பிரிவுக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், மே 9ஆம் தேதி இரவு, மண்டபம் – வேதாளை கடலோர பகுதியை இந்திய பொலிஸார் தீவிரமாக கண்காணிக்கத் தொடங்கினர்.
இடையர்வலசை கிராம பகுதியில் நள்ளிரவு நேரத்தில், கடத்தல் பொருட்களை கடத்தத் தயாராக இருந்த ஒரு குழுவை இந்திய பொலிஸார் சோதனையின்போது கண்டுபிடித்தனர். உடனடியாக நடவடிக்கை மேற்கொண்ட பொலிஸார் மூன்று பேரை விரட்டிச் சென்று கைது செய்தனர்.
பிடிபட்ட சந்தேகநபர்களிடமிருந்து ஒரு பெரிய பொதியை பறிமுதல் செய்த பொலிஸார், அதை சோதனையிட்டபோது 176 கிலோ கிராம் கஞ்சா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இது இலங்கைக்கு கடத்தப்படவிருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
போதைப்பொருள் கடத்தலுக்கு பின்னால் உள்ள முக்கியக் குழுவினரைக் கண்டறிய, இந்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவும் கடற்கரை காவல் படையினரும் இணைந்து விசாரணைகளை விரிவுபடுத்தியுள்ளனர்.
இலங்கை – இந்திய கடற்பரப்பில் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், பாதுகாப்பு மற்றும் காவல்துறைகள் தங்களது கண்காணிப்புகளை மேலும் தீவிரமாக்கியுள்ளன.