உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்தில் 9000 க்கும் மேற்பட்பட வாகனங்கள் இறக்குமதி

கடந்த பெப்ரவரி மாதம் முதல் ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகம் ஊடாக மொத்தமாக 9,151 புதிய மற்றும் பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாகனங்களின் இறக்குமதி மற்றும் விடுவித்தல் செயல்முறைகள் முன்னைய காலங்களை விட வேகமாக இடம்பெறுவதுடன், சுங்க நடைமுறைகள் முழுமையாக நிறைவேற்றப்பட்டதும் மற்றும் தேவையான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டதும், குறித்த வாகனங்கள் 24 மணி நேரத்துக்குள் விடுவிக்கப்படுகின்றன.
வாகன அனுமதி செயல்முறையை மேலும் விரைவுபடுத்தும் நோக்கில், ஆவண செயன்முறை நிலையங்களை வாரநாட்களில் இரவு 8.30 மணி வரையிலும் மற்றும் சனிக்கிழமைகளில் பிற்பகல் 1.00 மணி வரையிலும் செயற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுக நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வாகன இறக்குமதி செயல்முறையின் செயல்திறனை மேம்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்படும் புதிய நடவடிக்கைகள், வர்த்தகத் துறையின் விருப்பங்களை பூர்த்தி செய்யும் வகையிலும், நாட்டின் பொருளாதார முன்னேற்றத்துக்கும் ஆதரவளிக்கும் விதமாகவும் அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.