உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
ஜனாதிபதி அநுரகுமார தொடர்பில் அண்மையில் வெளியான விடயங்கள் குறித்து சர்வதேச விசாரணை வேண்டும்

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தொடர்பாக அண்மையில் வெளியாகியுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து சுயாதீனமான சர்வதேச விசாரணை அவசியம் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, அவர் கூறியதாவது, “பிரபல அரசியல் செயற்பாட்டாளர் துசித ஹல்லொலுவ ஜனாதிபதியை குற்றம் சாட்டிய சில நாட்களுக்குப் பின்னர், அவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளதோடு, முக்கியமான ஆவணங்கள் இனந்தெரியாதோரால் அபகரிக்கப்பட்டுள்ளன. இது மிகப் பரபரப்பானதும் அச்சுறுத்தலானதும் செயலாகும்.”
துசித ஹல்லொலுவ சமீபத்தில், “ஜனாதிபதி திஸாநாயக்க தனது முறையற்ற சொத்துகளை கிரீசில் முதலீடு செய்துள்ளார்” என்று குற்றம் சாட்டியிருந்தார். இதுதொடர்பாக அவர் மீது தாக்குதல் நடைபெறுவதும், அவரிடம் குற்றப்புலனாய்வுப் பிரிவால் வாக்குமூலம் பெறப்பட்டதும், சந்தேகத்திற்கிடமான சூழலை உருவாக்குகிறது.
அஜித் பெரேரா இதை தொடர்ந்தும் குறிப்பிட்டு, “இந்த விசாரணைகள் இலங்கைப் பொலிஸாரால் சுயாதீனமாக நடத்தப்படுமா என்பது சந்தேகமே. எனவே இதனை சர்வதேச விசாரணை அமைப்புகள், குறிப்பாக ஸ்கொட்லன்ட் யாட் போன்றவற்றிடம் ஒப்படைக்க வேண்டும்,” என்றார்.
அத்துடன், “இது ஜனாதிபதிக்கு எதிரான குற்றச்சாட்டு என்பதாலேயே அல்ல; அவர் தனது நற்பெயரை பாதுகாத்துக் கொள்ளவும், நியாயமான முறையில் உண்மை வெளிச்சத்திற்கு வரவும் இது அவசியமாகிறது,” என்று அவர் வலியுறுத்தினார்.