உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
கொட்டி தீர்க்க போகும் கன மழை ; மீனவர்களுக்கு விடுத்துள்ள அறிவுறுத்தல்

நாட்டின் பல பகுதிகளில் நாளைய தினம் 100 மில்லிமீற்றருக்கும் அதிக அளவில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்கள், நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் கடும் மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, ஏனைய பிரதேசங்களிலும் இடைக்கிடையே ஓரளவு பலத்த மழை பதிவாகும் வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும், மத்திய மலைநாடு, வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்கள் மற்றும் திருகோணமலை மாவட்டம் ஆகிய இடங்களில் 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வானிலை மாறுபாடுகளால், நாட்டைச் சூழவுள்ள கடற்பிராந்தியங்கள் கொந்தளிப்பாக காணப்படும் எனவும் சிலாபம் முதல் புத்தளம், மன்னார் வழியாக காங்கேசன்துறை வரையிலும், மாத்தறை முதல் ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலும் உள்ள கடற்பகுதிகளில், சில நேரங்களில் கடுமையான கொந்தளிப்பாக நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
எனவே, மீனவ சமுதாயத்தினர் மற்றும் கடற்படையினர், மறு அறிவித்தல் வரையிலும் கடலுக்குச் செல்லாமல் இருக்குமாறு கடுமையான அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.