மீட்டர் பொருத்தப்பட்ட முச்சக்கர வண்டிகளுக்கான எரிபொருள் ஒதுக்கீட்டினை அதிகரிக்க நடவடிக்கை!
மீட்டர் பொருத்தப்பட்ட முச்சக்கர வண்டிகளுக்கான எரிபொருள் ஒதுக்கீட்டினை அதிகரிக்க எதிர்பார்க்கப்படுவதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு வழங்கப்படும் எரிபொருள் ஒதுக்கீடு தொடர்பில் கருத்துரைக்கும் போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்தார்.
மீட்டர் பொருத்தப்பட்ட முச்சக்கர வண்டிகளில் குறிப்பிட்ட தூரத்திற்கு காட்சிப்படுத்தப்படும் கட்டணத்தை மாத்திரம் அறவிடுவதன் காரணமாக அவர்களுக்கு ஒதுக்கப்படும் எரிபொருள் தொகையினை அதிகரிப்பதற்கு கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
இந்நிலையில் அதிகரிக்கப்பட்ட எரிபொருள் ஒதுக்கீட்டினை தெரிவு செய்யப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெற்றுக்கொள்ளும் வகையிலும், வழமையான ஒதுக்கப்பட 5 லீற்றர் எரிபொருளினை எந்தவொரு எரிபொருள் நிரப்பு நிலையத்திலும் பெற்றுக்கொள்ளும் வகையிலும் புதிய வேலைத்திட்டம் அறிமுகப்படுத்தப்படுமென அவர் தெரிவித்தார்.
போக்குவரத்து ஆணைக்குழு மற்றும் போக்குவரத்து அமைச்சின் தகவல்களை பெற்றதன் பின்னர் இந்த வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படுமென மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.