QR Code தொடர்பில் வெளியான தகவல்!
தேசிய எரிபொருள் அனுமதி பத்திரத்திற்காகப் பெற்றுக் கொள்ளப்பட்ட தனிநபர் தகவல்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
தேசிய எரிபொருள் அனுமதி பத்திரத்தை விநியோகித்தல் மற்றும் முகாமைத்துவம் செய்தல் என்பவற்றுக்காக சேகரிக்கப்பட்ட தனிநபர் தகவல்கள் தொடர்பில் வெளியாகியுள்ள போலி செய்திகள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மின்சக்தி மற்றும் வலு சக்தி அமைச்சு, தகவல் மற்றும் தொடர்பாடல் தொழிநுட்ப முகவர் நிலையம் என்பன இணைந்து வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
fuelpass.gov.lk இல் உள்ள பதிவுச் செயல்முறையின் மூலம் இணையவழியூடாக பொதுமக்களால் வழங்கப்படும் எந்தவொரு தனிப்பட்ட தரவுகளும், மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சினால் நிறுவப்பட்ட அமைப்பின் பயன்பாட்டை எளிதாக்கும் நோக்கத்திற்காக மட்டுமே பயன்படுத்தப்படும்.
மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சினால் சேகரிக்கப்பட்ட தனிப்பட்ட தரவுகளை பயனுள்ள மற்றும் பாதுகாப்பான முறையில் பராமரிக்கவும் நிர்வகிக்கவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.
வேறு எந்த நோக்கத்திற்காகவும், அமைச்சு அல்லது தகவல் மற்றும் தொடர்பாடல் தொழிநுட்ப முகவர் நிலையம் குறித்த தரவுகளைப் பயன்படுத்தவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.