நாளை முதல் குறையும் உணவுப் பொருட்களின் விலைகள் !
நாளை முதல் உணவுப் பொருட்களின் விலைகள் குறைக்கப்படும் என சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
லிட்ரோ நிறுவனம் எரிவாயுவின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டதையடுத்து, மரக்கறிகள் மற்றும் பிற பொருட்களின் விலைக் குறைப்பு காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் (AICOA) தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.
எனினும் உணவுப்பொருட்களின் விலையில் இன்று திருத்தம் செய்யப்படவிருந்த போதிலும், கடந்த வாரம் லிட்ரோ எரிவாயு நிறுவனம் தனது விலைக் குறைப்பை அறிவிக்கத் தவறியதால், நாளை அனைத்து உணவுப் பொருட்களின் விலைகளையும் குறைக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அத்துடன் எரிவாயுவின் விலை 200 ரூபாவுக்கும் அதிகமாக குறைக்கப்படும் என நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
அதேசமயம் கொழும்பு புறக்கோட்டைச் சந்தையில் காய்கறிகளின் மொத்த விற்பனை விலைகள் கணிசமாகக் குறைந்துள்ள போதிலும் ஏனைய நகரங்களில் அல்லது கிராமப்புறங்களில் பொருட்களின் விலை குறைக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
எனவே பல்வேறு பிரச்சினைகள் இருந்தபோதிலும், சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் உணவு பொதி மற்றும் சாதாரண தேநீர் ஆகியவற்றின் விலைகளை குறைக்க முடிவு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
உணவு பொதிகள், கொத்து மற்றும் ஏனைய உணவுப் பொருட்களின் விலைகளை ஒழுங்குபடுத்துமாறு அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
அதோடு குறைந்தபட்சம் ஆறு மாதங்களுக்கு விலை நிலையாக இருக்க வேண்டும் என்றும் பண்டங்களின் விலை அதிகரிப்பு மற்றும் கொவிட்-19 தொற்று காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சிற்றுண்டிச்சாலை தொழிற்துறைக்கு அரசாங்கம் சலுகைகளை வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.