காமன்வெல்த்தில் வென்றவர்களுக்கு சனத் ஜெயசூரியா பாராட்டு!
காமன்வெல்த் போட்டிகளில் பதக்கங்களை வென்ற இலங்கை வீரர்களுக்கு, முன்னாள் ஜாம்பவான் வீரர் சனத் ஜெயசூரியா பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவின் பெர்மிங்காமில் 2022ஆம் ஆண்டு காமன்வெல்த் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் பல்வேறு பிரிவுகளில் நடைபெறும் போட்டிகளில் உலகம் முழுவதும் இருந்து பல வீரர், வீராங்கனைகள் பங்கேற்று வருகின்றனர்.
இலங்கையின் தடகள வீரர் யுபுன் அபேய்கூன், 100 மீற்றர் ஓட்டத்தில் 10.14 வினாடிகளில் கடந்து வெண்கலப் பதக்கத்தை வென்றார்.
இதன்மூலம் காமன்வெல்த் தொடரில் இந்த பிரிவில் பதக்கம் வென்ற முதல் ஆசியர் என்ற வரலாற்று சாதனையை படைத்தார். அதேபோல், இலங்கையின் பாரா தடகள வீரர் பலித பண்டார ஆடவருக்கான F42-44 வட்டு எறிதல் பிரிவில், 44.20 மீற்றர் தூரம் எறிந்து வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.
இலங்கை சார்பில் பதக்கம் வென்ற வீரர்களுக்கும், முன்னாள் ஜாம்பவான் கிரிக்கெட் வீரர் சனத் ஜெயசூரியா பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘அற்புதமான வெற்றிகளை பெற்ற யுபுன் அபேய்கூன் மற்றும் பலித பண்டார ஆகிய இருவருக்கும் வாழ்த்துக்கள். நீங்கள் இலங்கையால் முடியும் என்று காட்டிவிட்டீர்கள் தோழர்களே!’ என தெரிவித்துள்ளார்.