நல்லூர் ஆலயத்திற்கு வரும் பக்தர்களுக்கு பொலிஸாரின் விசேட அறிவிப்பு!
![நல்லூர் ஆலயத்திற்கு வரும் பக்தர்களுக்கு பொலிஸாரின் விசேட அறிவிப்பு!](http://itamilnews.com/wp-content/uploads/2022/08/22-62e9dced0d2d7.jpg)
யாழ்ப்பாணத்தில் கடந்த இரண்டு வருடங்களின் பின்னர் வரலாற்று பிரசித்திபெற்ற நல்லூர் கந்தன் ஆலய வருடாந்த மகோற்சவம் நேற்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி சிறப்பாக இடம்பெற்று வருகின்றது.
ஆலய வருடாந்த மகோற்சவத்தின் போது பெருமளவில் பக்தர்கள் ஒன்று கூடுவதனால் திருட்டு சம்பவங்களை தடுக்க கூடியவாறு யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரின் பணிபுரையின் கீழ் விசேட பொலிஸ் அணிகள் சிவில் மற்றும் சீருடையில் களமிறக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் நல்லூர் முருகனை தரிசிக்க வரும் பக்தர்கள் பெறுமதியான நகைகளை அணிந்து வருவதை தவிர்ப்பதோடு அதிகளவில் பணத்தினை ஆலயத்திற்கு எடுத்து வருவதையும் தவிர்க்குமாறு யாழ்ப்பாணம் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும், ஆலயத்திற்கு வரும் பக்தர்கள் தமது வீடுகளை சரியாக பூட்டி வீட்டின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தி ஆலயத்திற்கு வரும் பட்சத்தில் திருட்டு சம்பவங்களில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள முடியும் எனவும் பொலிஸார் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.