இலங்கையின் முக்கிய சுற்றுலா தலங்கள் தாக்கப்படலாம் ; அமெரிக்கா அவசர அறிவிப்பு
இனிப்புப் பண்டத்தை முன்னணி ஏற்றுமதித் துறையாக அரசாங்கம் ஆதரவு
இனிப்புப் பண்டத் தொழில்துறையை முன்னணி ஏற்றுமதித் துறையாக மாற்றுவதற்கு அரசாங்கம் ஆதரவளிக்கும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார்.
கொக்கோ உள்ளிட்ட பயிர்களைப் பயிரிடுவதற்கு அரசாங்கத்திற்கு சொந்தமான தோட்டங்களை குத்தகை அடிப்படையில் வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
கொழும்பு சினமன் கிரேண்ட் ஹோட்டலில் 24 ஆம் திகதி பிற்பகல் நடைபெற்ற இலங்கை இனிப்புப் பண்ட உற்பத்தியாளர் சங்கத்தின் 30ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
சிலாபம் மற்றும் குருநாகல் பிரதேசங்களில் உள்ள தோட்டங்களுக்குச் சொந்தமான அனைத்துக் காணிகளையும், ஜனதா தோட்ட அபிவிருத்திச் சபை , அரச பெருந்தோட்டக் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான எல்கடுவ உள்ளிட்ட ஏனைய காணிகளையும் இதற்காகப் பயன்படுத்துவது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது
இதுவரை பயன்படுத்தப்படாத மகாவலி ஏ மற்றும் பி வலயங்களில் பயிர்ச்செய்கையையை ஊக்குவிப்பதன் மூலம் நாட்டில் உணவுப் பாதுகாப்பை ஏற்படுத்த முடியும் எனவும் சுட்டிக்காட்டினார்.
மேலும், நாட்டில் போட்டிமிக்க ஏற்றுமதிப் பொருளாதாரத்தை உருவாக்குவதற்காக தேசிய உற்பத்தித் திறன் ஆணைக்குழு ஸ்தாபிக்கப்படும் எனத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஏனைய நாடுகளுடன் தற்போதுள்ள சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகளையும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு உடன்படிக்கைகளையும் வலுப்படுத்த அரசாங்கம் எதிர்பார்த்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், தேயிலை ஆராய்ச்சி நிறுவனம், தென்னை ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றையும் நவீனமயப்படுத்தப்பட்டு வருவதாகவும் இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் ஆராய்ச்சித் துறைக்காக சுமார் 08 பில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
இனிப்புப் பண்டத் தொழில்துறையினூடாக தேசிய பொருளாதாரத்திற்கு அவர்கள் ஆற்றிய பங்களிப்பை பாராட்டி, நாட்டில் உள்ள எட்டு முன்னணி இனிப்புப் பண்ட உற்பத்தியாளர்களுக்கு ஜனாதிபதியினால் விருதுகள் வழங்கி வழங்கப்பட்டன.
மெலிபன் ஸ்தாபகர் ஏ.ஜி. ஹின்னி அப்புஹாமி, கெண்டோஸ் ஸ்தாபகர் உபாலி விஜேவர்தன, Elephant House ஸ்தாபகர் ஆர்தர் வொன் போஸ்னர், மஞ்சி ஸ்தாபகர் மேனக விக்ரமசிங்க, மோதா ஸ்தாபகர் ஜூலியஸ் மோதா, உஸ்வத்த ஸ்தாபகர் பி.ஜே.சி. பெரேரா, லக்கி லேண்ட் ஸ்தாபகர் சிங்கசாமி முத்தையா, செரிஸ் பிஸ்கட் ஸ்தாபகர் விதானகே ஜோன் அப்புஹாமி ஆகியோருக்கு இந்த விருதுகள் வழங்கப்பட்டன.
இலங்கை இனிப்புப் பண்ட உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் கலாநிதி சமித பெரேரா, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு நினைவுப் பரிசை வழங்கி வைத்தார்.
கைத்தொழில் மற்றும் சுகாதார அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பதிரன, நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன, பொருளாதார விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி ஆர்.எச்.எஸ். சமரதுங்க மற்றும் இலங்கை இனிப்புப் பண்ட உற்பத்தியாளர்கள் சங்க உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.