இம்முறையும் யாழ் வலயம் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் முன்னிலை!

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் முடிவுகள் நேற்றையதினம் (25-01-2023) இரவு வெளியாகிய நிலையில் யாழ்ப்பாணக் கல்வி வலயத்தின் புனித ஜோன் பொஸ்கோ ஆரம்ப பாடசாலை மாணவன் யலீபன் யதூசிகன் 191 புள்ளிகளைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.
மேலும், இப்புள்ளியே அகில இலங்கையில் தமிழ்மொழிமூல பெறுபேற்றில் முன்னிலையாகவுள்ளது என அறிய முடிகிறது.
புனித ஜோன் பொஸ்கோ வித்தியாலயத்தில் இம்முறை 216 மாணவர்கள் பரீட்சையில் தோற்றியதில் 154 மாணவர்கள் வெட்டுப் புள்ளியை தாண்டியுள்ளனர்.
இதேபோன்று யாழ்.இந்து ஆரம்ப பாடசாலையில் 217 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றி்யதில் 124 மாணவர்கள் வெட்டுப்புள்ளியை தாண்டியுள்ளனர்.
இவர்களில் கிரிதரன் அர்மிதா என்ற மாணவி 186 புள்ளிகளைப் பெற்றுள்ளார்.
யாழ். கொக்குவில் இந்து ஆரம்ப பாடசாலை மாணவன் மதுசணன் புலமைப் பரிசில் பரீட்சையில் 186 புள்ளிகள் பெற்றுள்ளார்.
இதேவேளை கொக்குவில் இந்து ஆரம்ப பாடசாலையில் இம்முறை 188 மாணவர்கள் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றியதில் 91 மாணவர்கள் வெட்டுப்புள்ளியைத் தாண்டியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
யாழ்.கல்விவலயத்திற்குட்பட்ட கிராமப்புற பாடசாலையான கதிரிப்பாய் சுப்பிரமணிய வித்தியாலயத்தில் 7 மாணவர்கள் தோற்றி, அதில் 5 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.
வடமாகாணத்திலுள்ள கல்வி வலயங்களில் யாழ்ப்பாண வலயத்தில் இம்முறை வெட்டுப் புள்ளியினை தாண்டி புள்ளிகளைப் பெற்றோர் 697 பேர் இது 25.37 வீதமாகவும் சித்திப் புள்ளியான 70 புள்ளிகளுக்கு மேல் பெற்றோர் 2281 ஆகவும் காணப்படும் அதேவேளை இது 83.04 வீதமாகவும் காணப்படுகின்றது.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இம்முறை சித்திவீதம் அதிகரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.