இலங்கைக்கு வர மறுப்புத் தெரிவிக்கும் விமானங்கள்!

விமான எரிபொருளை பெறுவதில் உள்ள சிரமம் காரணமாக இலங்கைக்கு வரும் மற்றும் புறப்படும் விமானங்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்நிலையை உடனடியாக மாற்றி விமானப் போக்குவரத்துத் துறையை ஸ்திரப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலான விசேட கலந்துரையாடல் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இந்த விசேட கலந்துரையாடலில் அனைத்து இலங்கை விமான நிறுவனங்களின் பிரதிநிதிகள், சிவில் விமான சேவைகள் அதிகார சபை அதிகாரிகள் மற்றும் பெட்ரோலிய கூட்டுத்தாபன பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.
இலங்கைக்கு வந்து செல்லும் மற்றும் புறப்படும் விமானங்களுக்கு தடையின்றி விமான எரிபொருளை வழங்கும் வேலைத்திட்டத்தின் அவசியத்தை அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
இதன்படி, இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தால் இந்தத் தேவையை பூர்த்தி செய்ய முடியாவிட்டால், விமான எரிபொருளை இலங்கைக்கு கொண்டு வர தனியார் துறைக்கு அனுமதி வழங்கப்பட வேண்டுமென அமைச்சர் வலியுறுத்தினார்.
இதன்போது, பெட்ரோலியக் கூட்டுத்தாபனமும் பெட்ரோலிய அமைச்சும் அனுமதி மற்றும் வசதிகளை வழங்கினால் விமான எரிபொருளை தமது சொந்த செலவில் இலங்கைக்கு கொண்டு வந்து விநியோகிக்கத் தயார் என விமானத்துறையை பிரதிநிதித்துவப்படுத்தும் பல நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
ஏற்கனவே இரண்டு கச்சா எண்ணெய் கப்பல்கள் இலங்கையை வந்தடைந்துள்ளதாகவும், சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையத்தினால் நாளொன்றுக்கு அறுநூறு மெற்றிக் தொன் விமான எரிபொருளை உற்பத்தி செய்யமுடியும் எனவும், இம்மாதம் 20ஆம் திகதி முதல் தொடர்ந்து விமான எரிபொருளை வழங்குவதாக பெட்ரோலிய கூட்டுத்தாபன பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
ஒவ்வொரு விமான சேவைக்கும் தினசரி தேவைப்படும் எரிபொருள் அளவு மற்றும் அதை வழங்க பெட்ரோலிய கூட்டுத்தாபனம் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்ய சிவில் விமான போக்குவரத்து ஆணையத்திற்கு அறிவுறுத்தப்பட்டது.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தனது எரிபொருள் தேவையை பூர்த்தி செய்வதற்காக இந்தியாவிலுள்ள விமான நிலையங்கள் ஊடாக ஏற்பாடு செய்துள்ளதாகவும், எரிபொருளை அங்கிருந்து பெற்று வருவதால், பயணிகள் மற்றும் பொருட்களை முழுவதுமாக கொண்டு செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.
குறிப்பாக எதிர்வரும் மாதங்களில் சுற்றுலாப் பருவம் ஆரம்பிக்கும் போது கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அதிகளவான விமானங்கள் வரும் என சுட்டிக்காட்டிய விமான நிறுவன பிரதிநிதிகள், தேவையான அளவு விமான எரிபொருளை தொடர்ச்சியாக வழங்குவது அவசியமானது என சுட்டிக்காட்டினர்.
விமான எரிபொருளை கொண்டு வருவதற்கு பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திற்கு வழங்கப்பட்டுள்ள ஏகபோக அதிகாரத்தை நீக்குவது காலத்தின் தேவை என சுட்டிக்காட்டிய அமைச்சர், அதற்காக ஏற்கனவே பெட்ரோலிய சட்டத்தை திருத்துவதற்கான சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அது விரைவில் நிறைவேற்றப்படும் எனவும் சுட்டிக்காட்டினார்.
மேலும், அதிகளவு விமான எரிபொருளை சேமித்து வைப்பதற்கும், எதிர்கால தேவைகளை கருத்தில் கொண்டும் தேவையான எரிபொருளை விமான நிலையத்திலும் அதற்கு வெளியேயும் சேமித்து வைக்க நடவடிக்கை எடுக்க பெட்ரோலிய கூட்டுத்தாபனம் செயல்பட்டு வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.