இலங்கையின் முக்கிய சுற்றுலா தலங்கள் தாக்கப்படலாம் ; அமெரிக்கா அவசர அறிவிப்பு
இலங்கையில் 10,000 பாடசாலைகளுக்கு ஏற்படவுள்ள நிலை!
கல்விப்பொதுத் தராதர உயர்தர பரீட்சை திகதியை பிற்போட்டால் 10 ஆயிரம் பாடசாலைகளை ஒரு மாத காலத்துக்கு மூடவேண்டிய நிலைமை ஏற்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். க.பொ.த உயர்தர பரீட்சையை இரண்டு மாதங்களுக்கு பிற்படுத்தினால் 10ஆயிரம் பாடசாலைகள் ஒரு மாதகாலத்துக்கு மூடவேண்டி ஏற்படுகின்றது.
மாணவர்களுக்கு ஏற்கனவே பாடசாலை நாட்கள் குறைவாகவே காணப்படுகின்றன. ஒரு மாதத்துக்கு பாடசாலைகளை மூடிவிடுவதால் மாணவர்களின் பாடத்தவணைகளை உரிய காலத்துக்கு முடித்துக் கொள்ள முடியாமல் போகின்றது.
அதேநேரம் பாடசாலை நேர அட்டவணைக்கும், பரீட்சை நேர அட்டவணைக்கும் இடையில் முரண்பாடு ஏற்படுகின்றது. அத்துடன் உயர்தர பரீட்சையை இரண்டு மாதங்களுக்கு பிற்போடுவதனால் அடுத்து இடம்பெற ஏற்பாடாகி இருக்கின்ற க.பொ.த சாதாரண தர பரீட்சையை நடத்த முடியாமல் போகின்றது.
இவ்வாறு சென்றால் ஒரு நிலைமைக்கு கொண்டுவர முடியாமல் போகும். கோவிட் தொற்று காரணமாக அனைத்து பரீட்சைகளும் பிற்போடப்பட்டிருந்தன, அதனால் ஏற்பட்ட இந்த பிரச்சினையை தற்போதுதான் ஓரளவுக்கு சரி செய்து வருகின்றோம்.
அத்துடன் உயர்தர பரீட்சையை டிசம்பர் மாதத்தில் நடத்துவதால் குறிப்பிட்ட சில மாணவர்களுக்கே கஷ்டமான நிலை ஏற்படுகின்றது. முதல் தடவையாக பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை.
இரண்டாம் முறை பரீட்சை எழுதுவதற்கு எதிர்பார்த்திருக்கும் மாணவர்களுக்கு பரீட்சைக்கு தயாராவதற்கு 3 மாதம் வரை காலம் இருக்கின்றது. அவர்கள் பரீட்சைக்கான பாடநெறியை பூரணப்படுத்தி இருக்கின்றனர்.
என்றாலும் பரீட்சை விடயதானங்களை மாற்றி பரீட்சைக்கு முகம்கொடுப்பவர்களுக்கு சற்று சிரமம் ஏற்படலாம். அத்துடன் பரீட்சைகளை பிற்படுத்தும்போது அடுத்த வருட புதிய பாடசாலை தவணையை மார்ச் மாதம் 28ஆம் திகதி ஆரம்பிக்க முடியாமல் போகும். கடந்த வருடம் புதிய பாடசாலை தவணை ஏப்ரல் மாதத்திலேயே ஆரம்பிக்கப்பட்டது.
அதனால் இரண்டு தவணைகளையே எமக்கு பூரணப்படுத்த முடிந்தது. அடுத்த வருடமும் இந்த நிலையே ஏற்படும். என்றாலும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைக்கு அமைய, உயர்தர பரீட்சை திகதியில் மாற்றத்தை செய்ய முடியுமா என பரீட்சை திணைக்களத்திடம் முன்வைக்கின்றேன்.
திகதியில் மாற்றம் ஏற்படும் போது ஏனைய மாணவர்களுக்கும் அநீதி ஏற்படக்கூடாது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டி இருக்கின்றது என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.