நெருங்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்
எரிபொருள் விலையை 70 ரூபாவாக குறைக்க முடியும்!
ஒரு லீட்டர் டீசல் மற்றும் பெட்ரோலின் விலையை 70 ரூபாவினால் குறைக்கலாம் என ஐக்கிய கூட்டு தொழிற்சங்க சக்தியின் ஒருங்கிணைப்பாளர் ஆனந்த பாலித தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர அறிமுகப்படுத்திய எரிபொருள் விலை சூத்திரத்தின் அடிப்படையில் நேற்றிரவு உள்ளூர் எரிபொருள் விலைகள் திருத்தப்பட்டிருக்க வேண்டும்.
எனினும் திருத்தம் மேற்கொள்ளப்படவில்லை. விலை திருத்தம் என்பது எப்போதும் விலை உயர்வு என்று அர்த்தம் இல்லை. உலக சந்தையில் எண்ணெய் விலை குறைவடைந்ததன் பயனை பொதுமக்கள் பெற்றுக்கொள்ள வேண்டும் என இரு தரப்பு அரசியல்வாதிகளும் முன்னர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
தற்போது கச்சா எண்ணெய் பரல் 27 அமெரிக்க டொலருக்கும் குறைவாக விற்பனை செய்யப்படுகிறது. உள்ளூர் துறைமுகத்திற்கு எண்ணெய் வந்து சேரும் விகிதத்தின்படி அனைத்து எரிபொருள் வகைகளின் விலையை 70 ரூபாவினால் குறைக்கலாம்.
ஒரு லீட்டர் 95 ஒக்டேன் பெட்ரோலுக்கு 80 ரூபாயும் மற்றும் சுப்பர் டீசலுக்கு 67 ரூபாயும் வரி விதிக்கப்படுவதால் மேலும் விலை குறைக்கலாம். இதேவேளை பல மாதங்களாக மீனவ சமூகங்கள் மற்றும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு மண்ணெண்ணெய் இல்லை.
இந்நிலையில் ஒரு லீட்டர் மண்ணெண்ணெயின் விலையை 200 ரூபாவாக அதிகரிக்க அதிகாரிகளால் திட்டமிடப்பட்டுள்ளது. எரிசக்தி அமைச்சராக கஞ்சன விஜேசேகர நியமிக்கப்பட்டதன் பின்னர், சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் நான்கு தடவைகள் மூடப்பட்டுள்ளது.
கடந்த 48 நாட்களாக சுத்திகரிப்பு நிலையத்தின் செயற்பாடுகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளது. எரிபொருட்களின் விலையை குறைப்பதன் ஊடாக, எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் உள்நாட்டு எரிவாயு விலை உயர்வு காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஓரளவு நிவாரணம் வழங்க வேண்டும்.”என கூறியுள்ளார்.
இதேவேளை விலைச்சூத்திரத்தின்படி, எரிபொருளின் விலையில் எந்த மாற்றத்தையும் செய்யாமல் இருப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தன.
எப்படியிருப்பினும் எரிபொருள் விலை ஒவ்வொரு மாதமும் முதலாம் திகதி மற்றும் 15 ஆம் திகதிகளில் திருத்தப்படும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதற்கமைய, நேற்று இரவு இந்த திருத்தத்தை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டிருந்தது. எனினும் திருத்தம் மேற்கொள்ளப்படவில்லை. என்ற போதும் அது தொடர்பில் அமைச்சு எவ்வித விளக்கமும் அளிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டிருந்தது.