போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
கவலைக்கிடமான நிலையில் இலங்கையின் பொருளாதார நிலை
இந்து சமுத்திரத்தின் முத்து என ஒரு காலத்தில் பலராலும் வர்ணிக்கப்பட்ட இலங்கையின் பொருளாதார நிலை தற்போது கவலைக்கிடமான நிலையில் தள்ளப்பட்டுள்ளது.
திட்டமிடப்படாத பொருளாதார நிலை மற்றும் அரசியல் குழப்ப நிலைகள் இலங்கையின் பொருளாதாரத்தை புரட்டிப் போட்டு வருகின்றது.
இந்த நிலையில் பொருளாதார ரீதியில் சிக்கி தவித்து வரும் மக்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ (Gotabaya Rajapaksa) தலைமையிலான அரசாங்கத்தினை பதவி விலகுமாறு தொடர்ச்சியாக பல்வேறு எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டாலும் மக்களின் குரல்களுக்கு செவி சாய்க்காத நிலையில் தொடர்ந்தும் தான்தோன்றித்தனமான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றது.
மக்களின் தன்னெழுச்சியான ஆர்ப்பாட்டங்களை சமாளிக்கும் விதமான அமைச்சரவை கலைப்பு, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ (Mahinda Rajapaksa) இராஜினாமா, புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickremesinghe) மற்றும் அமைச்சரவை நியமனம் என பலதரப்பட்ட மாற்றங்களை செய்தும் பொருளாதார ரீதியான பிரச்சினைகளுக்கு எவ்விதமான தீர்வுகளும் வழங்கப்படவில்லை.
இதேவேளை பொருளாதார நெருக்கடி நிலை தொடருமாக இருந்தால் மறுபுறம் இலங்கையில் உணவுப் பஞ்சம் ஏற்படக்கூடிய ஏதுநிலை உருவாகும் என பல்வேறு தரப்பினரும் எச்சரித்து வருகின்றனர்.
அதேவேளை நேற்றையதினம் முதல் பல்வேறு இறக்குமதி பொருட்களின் வரி அதிகரிப்பு காரணமாக மீண்டும் பல்வேறு தரப்பட்ட பொருட்களின் விலைகள் உயரும் நிலையில் காணப்படுகின்றது.
கோதுமைக்கான வரி அதாவது இறக்குமதி வரி அதிகரிப்பால் பாணின் விலை விரைவில் 250ஐ எட்டக்கூடிய ஏதுநிலை தற்போது காணப்படுகின்றது.
அதேவேளை விவசாயத்துறையை பொறுத்தவரையில் விவசாயிகள் காலபோக நெற்செய்கைக்கான ஆரம்ப கட்ட வேளைகளில் ஈடுபட்டாலும் எதிர்வரும் 15ம் திகதிக்கு முன்னர் விவசாயிகளுக்கு இரசாயன உரம் கிடைக்காவிட்டால் நாடே மிகப்பெரிய ஆபத்தில் சிக்கும் என்று விவசாய அமைச்சின் செயலாளர் ரோகண புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.
மறுபுறம் இந்தியாவின் கிரடிட்லைன் கடன்திட்டத்தின் கீழ் இரசாயன உரம் கிடைக்கும் என கூறப்பட்டாலும் அதுதொடர்பில் பல்வேறுபட்ட கலந்துரையாடல்கள் இடம்பெற்றாலும் கூட இரசாயன உரம் எப்போது கிடைக்கும் என்ற உறுதியான தகவல்கள் இதுவரை வெளிப்படுத்தப்படவில்லை.
அதேவேளை எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் வரையே நாட்டிற்கு தேவையான அரிசி கையிருப்பில் உள்ளது.
இந்நிலையில் நாட்டை பஞ்சத்தில் இருந்து மீட்க வேண்டுமாக இருந்தால் 8இலட்சம் மெற்றிக்டொன் அரிசி கைவசம் இருத்தல் வேண்டும் என கூறப்படுகின்றது.
மறுபுறம் இரசாயன உரத் தடை காரணமாக பல விவசாயிகள் விவசாய நடவடிக்கைகளை கைவிட்டு வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகின்றார்கள். இவ்வாறான நிலையில் இம்முறை மிகக் குறைந்த அறுவடையே கிடைக்கும் என கூறப்படுகின்றது.
அதேவேளை அரிசி மற்றும் நெல்லின் விலைகள் 500 ரூபாவாக உயரும் நிலை உருவாகும் என கூறப்படுகின்றது.
அதேவேளை வீட்டுத் தோட்டங்களை மேற்கொள்ளுமாறும், உணவுகள் வீணாவதை தவிர்க்கமாறும் பல்வேறு தரப்பினரும் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்து வருகின்றது.
இவ்வாறான நிலையில் எதிர்வரும் நாட்கள் இலங்கையின் பொருளாதார நெருக்கடி நிலையை மக்கள் எவ்வாறு சமாளிக்க போகின்றனர் என்பது பெரும் கேள்விக்குறியே!!