நெருங்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்
குற்றத்தை ஏற்றுக்கொண்டுள்ள சந்தேக நபர்
அட்டுலுகமவில் 9 வயதான பத்திமா ஆயிஷா என்ற சிறுமியை தாமே கொலை செய்ததாக சந்தேகத்தில் கைது செய்யப்பட்டிருந்த 29 வயதுடைய நபர் குற்றத்தை ஏற்றுக்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபரிடம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில்
கடையில் இருந்து தனியாக வீடுதிரும்பிய சிறுமியை குறித்த சதுப்புநில பகுதிக்கு தூக்கி சென்றதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சிறுமியை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்ததாகவும், இதன்போது சிறுமி மிகவும் அச்சமடைந்ததாகவும் சந்தேகநபர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, விடயம் அம்பலமாகிவிடும் என்ற அச்சத்தில் சிறுமியை கொலை செய்ததாக குறித்த நபர் தமது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், சிறுமியின் சடலம் மீதான பிரேத பரிசோதனை பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் இன்று முன்னெடுக்கபட்டது.
இதன்படி, பிரேத பரிசோதனை அறிக்கையின்படி சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், சிறுமி நீரில் மூழ்கடித்து கொலைசெய்யப்பட்டுள்ளமை பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த நிலையில், பண்டாரகம – அட்டுலுகம சிறுமியின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை இன்று நீதவானிடம் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அட்டுலுகம பிரதேசத்தை சேர்ந்த 29 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவரே இவ்வாறு பிரதான சந்தேகநபராக அடையாளப்படுத்தப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
மேலும், குறித்த சந்தேகநபர் கடுமையாக போதைபொருளுக்கு அடிமையானவர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை, குற்றப்புலனாய்வு பிரிவு மற்றும் பண்டாரகம பொலிஸ் நிலையத்தின் ஐந்து பொலிஸ் குழுக்கள் இணைந்து தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
அத்துடன் இந்த சம்பவம் தொடர்பில் இதுவரை சுமார் 30 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
குறித்த சிறுமி கடந்த 27 ஆம் திகதி காணாமல் போயிருந்த நிலையில் நேற்று முன்தினம் சடலமாக மீட்கப்பட்டார். சிறுமியின் வீட்டின் அருகில் உள்ள சதுப்பு நிலத்தில் புதையுண்ட நிலையில் சடலம் பிரதேச மக்களால் கண்டெடுக்கப்பட்டது.
மேலும், இன்றைய தினம் சிறுமியின் இறுதிகிரிகைகள் முன்னெடுக்கபடவுள்ளதாகவும் தெரிவிக்கபட்டுள்ளது. அத்துடன், சில அரசியல் தலைவர்கள் சிறுமியின் வீட்டிற்கு சென்று அவரின் உறவினர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
சிறுமியின் மரணத்திற்கு காரணமாகவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கபடவேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் ரவுப் ஹக்கிம் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அட்டுலுகம பகுதியில் போதைபொருள் பாவனை அதிகரித்துள்ளமையே குற்றச்செயல்கள் அதிகரிக்க காரணமென பொதுமக்கள் குறிப்பிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதேவேளை, போதைபொருள் பாவனையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பீ பெரேரா குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், குற்றவாளிகள் அடையாளப்படுத்தும் போதே, அவர்கள் சார்பில் நீதிமன்றில் சட்டத்தரணிகள் முன்னிலையாகாதிருக்க பாணதுறை சட்டத்தரணிகள் சங்கம் தீர்மானித்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், சிறுமியின் மரணம் தொடர்பான வழக்கு விசேட நீதிமன்றின் ஊடாக நடைபெறவேண்டுமெனவும், அதன் ஊடாக சமூகத்திற்கு ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டுமெனவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பீ பெரேரா குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, சிறுமியின் வீட்டிற்கு காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டகாரர்கள் சார்பாக குழுவொன்றும் நேரடியாக சென்று உறவினர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளதாக தெரியவருகின்றது.
இதேவேளை, சிறுவர் துஸ்ப்பிரயோக சம்பவங்கள் தொடர்பிலான தகவல்களை பகிரும்போது பாதிக்கபட்ட பிள்ளைகளின் உருவப்படங்களை பயன்படுத்த வேண்டாடமென தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.
அத்துடன், அவ்வாறான செய்திகளை பகிரும் போது மிகவும், பொறுப்புடன் செயற்படுமாறும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பாதிக்கப்பட்ட பிள்ளைகளின் தகவல்களை பகிரும் போது, “அது தமது பிள்ளையாக இருந்தால்” என்ற சிந்தனையுடன் செயற்பட வேண்டியது அவசியமாகுமென தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.