நெருங்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்
கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட இளம் பெண்
தென்னிலங்கையில் இளம் பெண் ஒருவர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இரத்தினபுரி, எலபாத்த பிரதேசத்தில் மஹிரகல பிரதேசத்தில் பெண் ஒருவர் கொடூரமான முறையில் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பகுதியில் வசிக்கும் 27 வயதுடைய திருமணமான பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவருக்கு கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் திருமணம் நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
சந்தேக நபர் கைது
கொலைச் சம்பவம் தொடர்பில் கெஹலோவிடகம பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேக நபர் 21 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை ஆவார்.
எலபாத்த பிரதேசத்தில் வேலை முடிந்து வீட்டிற்கு செல்லும் வழியில் குறித்த பெண் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
அவரது கணவரும் அதே இடத்தில் வேலை செய்து வந்துள்ளார். எனினும் சம்பவத்தன்று அவர் வேலைக்குச் செல்லவில்லை என தெரியவந்துள்ளது.
கொலை நடந்த அன்று பிற்பகல் குறித்த சந்தேக நபர் குறித்த பெண்ணின் வீட்டில் இருந்து 500 மீற்றர் தொலைவில் உள்ள வெறிச்சோடிய இடத்தில் வீதியில் தங்கியிருந்து அவரிடம் 100 ரூபா பணம் கேட்டுள்ளார். பெண் கொடுக்க மறுத்ததையடுத்து கத்தியால் மூன்று இடங்களில் குத்தியதாக சந்தேக நபர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
பின்னர் சந்தேக நபர் அந்த பெண்ணின் கையில் இருந்த பொருட்களை எடுத்துக்கொண்டு தப்பியோடியுள்ளார். பெண்ணை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்துள்ளார்.
போதைக்கு அடிமையான நபர்
சந்தேகநபர் பொலிஸாரினால் விசாரணைக்குட்படுத்தப்பட்ட போது, கசிப்புக்கு அடிமையானதாகவும், கசிப்பு குடிக்க பணம் கேட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
சந்தேகநபர் வழங்கிய வாக்குமூலத்தின் பிரகாரம், குறித்த பெண்ணின் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கத்தி தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் ஆனால் தற்போது அந்த கத்தி காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்று இரத்தினபுரி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். கொலைச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை எலபாத்த பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.