கொழும்பு வலயம் மற்றும் அதனை அண்டிய நகரங்களின் பாடசாலைகளுக்கு விடுமுறை
மேல் மாகாணத்தின் கொழும்பு வலயம் மற்றும் அதனை அண்டிய நகரங்களின் பாடசாலைகளுக்கும், ஏனைய மாகாணங்களின் பிரதான நகர பாடசாலைகளுக்கும் இன்று முதல் எதிர்வரும் 24ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
பிரதான நகரங்கள் இல்லாத பகுதிகளில் உள்ள பாடசாலைகள் தொடர்பில் பொருத்தமான தீர்மானங்களை மேற்கொள்வதற்கு மேல் மாகாணம் உட்பட சகல மாகாணங்களிலும் உள்ள கல்வி அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கப்படுவதாக கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் , மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் ஆகியோருக்கு போக்குவரத்துக்கு சிரமங்கள் ஏற்படாத வகையில் பிரதேச மட்டத்தில் குறைந்த மாணவர் எண்ணிக்கையை கொண்ட பாடசாலைகளை நடத்துவதற்கு மாகாண கல்வி அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதேசமயம் சில பாடசாலைகளில் சமூகமளிக்க முடியாத மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் எண்ணிக்கையை கருத்திற்கொண்டு வலய கல்வி பணிப்பாளருடன் கலந்துரையாடி பொருத்தமான தீர்மானத்தை மேற்கொள்ளும் அதிகாரம் அந்தந்த பாடசாலை அதிபர்களுக்கு வழங்கப்படுவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும் பாடசாலை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்ற போதிலும் சில மாணவர்களுக்கு பாடசாலைகளுக்கு சமூகமளிக்க முடியாவிட்டால் அவர்களுக்கு இணையவழி ஊடாக கற்பித்தல் செயற்பாடுகளை முன்னெடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் கல்வி அறிவுறுத்தியுள்ளது.