ஒன்லைனில் பொருட்களை விற்பனை செய்வோருக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்!
சாணக்கியன் தெரிவித்துள்ள குற்றச்சாட்டை நிராகரித்த தயா கமகே

மக்கள் வங்கியில் இருந்து தான் கடன் பெற்று, மூன்று வருடமாக ஒரு சதமேனும் செலுத்தவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ள குற்றச்சாட்டை நிராகரிப்பதாக ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான தயா கமகே தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டத்தில் அமைந்திருக்கும் அவரது காரியாலயத்தில் நேற்று (29) மாலை நடத்திய விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே, அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், “சாணக்கியன் எம்.பி இந்த குற்றச்சாட்டை பாராளுமன்றத்திலும் தெரிவித்திருந்ததுடன், பின்னர் ஊடக சந்திப்பொன்றிலும் தெரிவித்திருந்தார். பாராளுமன்றத்தில் தெரிவித்த விடயத்துக்கு என்னால் நடவடிக்கை எடுக்க முடியாது. என்றாலும் ஊடக சந்திப்பில் தெரிவித்த கருத்துக்கு எதிராக எனக்கு சட்ட நடவடிக்கை எடுக்க முடியும்.
“அத்துடன் இன்று கூட எனது தொழிற்சாலைகள் இயங்குகின்றன. கொரோனா காலத்திலும் சிரமங்களுக்கு மத்தியில் சிறப்பாக ஆடைதொழிற்சாலைகள் இயங்கின. சாணக்கியன் எம்.பி. தெரிவித்திருப்பது போல் ஒரு சதமேனும் மக்கள் வங்கியில் இருந்து நான் கடன் பெற்றதில்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகின்றேன்.
“எனவே, தற்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்க பிரதமர் பதவிக்கு வந்ததுடன் நான் எடுத்ததாக குறித்த பாராளுமன்ற உறுப்பினர் கூறிய அந்த கடன் தொகையை இல்லாமல் செய்ய நடவடிக்கை எடுத்திருப்பதாக தெரிவித்திருக்கின்றார். இதனை நான் வன்மையாக கண்டிக்கின்றேன்.
“நாங்கள் வியாபாரம் செய்கின்றவர்கள். ஆனால், இவ்வாறான கடனுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எனது கெளரவத்தை பாதிக்கும் வகையில் என் மீது பொய் குற்றச்சாட்டை சாணக்கியன் எம்.பி தெரிவித்துள்ளார்.
“பிரதமருடன் சாணக்கியன் எம்.பிக்கு தனிப்பட்ட பிரச்சினைகள் இருக்கலாம். அதற்காக என்னை திருடர் எனத் தெரிவித்து ரணில் விக்கிரமசிங்கவுடன் இருப்பவர்கள் அனைவரும் திருடர்கள் எனத் தெரிவிப்பதற்கு அவர் முயற்சிக்கின்றார்” என்றார்.