மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட நிலையில் அரசியல் பலத்தினால் மீண்டும் வழங்கப்பட்ட மின் இணைப்பு!
யாழில் பல லட்சம் ரூபாய் மின் கட்டணம் செலுத்தவேண்டிய எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றின் மின் இணைப்பு மின்சாரசபையினால் துண்டிக்கப்பட்ட நிலையில் அரசியல் அழுத்தம் காரணமாக சிறிது நேரத்திலேயே மீண்டும் மின் இணைப்பு வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் சில நிமிடங்களில் நிலுவை கட்டணம் எதுவும் செலுத்தாதபோதும் கழற்றியவர்களே வந்து மின்சார இணைப்பினை வழங்கி சென்றுள்ளனர். இந்த சம்பவம் யாழ்.சுன்னாகம் பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றிலேயே இடம்பெற்றிருக்கின்றது.
குறித்த எரிபொருள் நிரப்ப நிலையம் பல லட்சம் ரூபாய் மின்கட்ணத்தை செலுத்தாமல் நிலுவையில் வைத்திருப்பதாக கூறப்பட்டு நேற்றைய தினம் மின் இணைப்பு மின்சாரசபையினால் துண்டிக்கப்பட்டுள்ளது.
அரசியல் அழுத்தம்
எனினும் செலுத்தவேண்டிய மின் கட்டணத்தில் ஒரு ரூபாய் கூட மீள செலுத்தாமலே துண்டிக்கப்பட்ட மின் இணைப்பு மீண்டும் இணைக்கப்பட்டிருக்கின்றது.
மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட நேரத்திலிருந்து மின்சாரசபைக்கு கடுமையாக அரசியல் அழுத்தம் பிரயோகிக்கப்பட்டதாலேயே மின் இணைப்பு மீளவும் வழங்கப்பட்டதாக கூறப்படுகின்றது.
சில ஆயிரங்களில் இருந்தாலே மின் இணைப்பை துண்டிக்கும் மின்சார சபையினர் அரசியல்வாதிகள் இலட்ச கணக்கில் பணம் செலுத்த வேண்டியதாக உள்ள போதிலும் அவர்களுக்கு மின் துண்டிப்பை மேற்கொள்வதில்லை என்பது பரவலான குற்றச்சாட்டு உள்ளது.
பொதுமக்கள் விசனம்
இவ்வாறான நிலையில் , தற்போது பெரும் தனியார் முதலாளிகள் , அரசியல்வாதிகளின் உறவினர்கள் மின் கட்டணம் செலுத்தாதபோதிலும் அவர்களுக்கும் மின் துண்டிப்பினை மேற்கொள்ளாது மின்சார சபை தவிர்ப்பது மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தி உள்ளது.