யாழில் கடும் மோதல் ஈடுபட்ட இளைஞர்கள் குழு! 3 பேர் வைத்தியசாலையில்
யாழில் தீபாவளி பண்டிகை அன்று இரு இளைஞர் குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் மூன்று இளைஞர்கள் காயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் யாழ்ப்பாணம் – பலாலி வீதியில் உரும்பிராய் சந்திக்கு அருகில் நேற்று முன்தினம் இரவு (12-11-2023) இடம்பெற்றுள்ளது.
குறித்த மோதல் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
உரும்பிராய் சந்திக்கு அருகில் இளைஞர் குழு ஒன்று வீதியில் நின்றுள்ளது.
இதன்போது, வீதியில் கன ரக வாகனத்தில் சென்ற ஏழாலை பகுதியை சேர்ந்த இளைஞர்களுடன் முரண்பாடு ஏற்பட்டு, இரு குழுவினரும் வீதியில் மோதலில் ஈடுபட்டனர்.
அதன்போது அவர்கள் பயணித்த கன ரக வாகனமும் சேதமாக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து அவர்கள் அவ்விடத்தில் இருந்து தப்பி தமது ஊருக்கு சென்று, மேலும் சில இளைஞர்களுடன் மூன்று கன ரக வாகனத்தில் உரும்பிராய் சந்தி பகுதிக்கு வந்து தம்மை தாக்கியவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இரு இளைஞர் குழுக்களும் வீதியில் மோதிக்கொண்டமையால், வீதியின் ஊடான போக்குவரத்து ஒரு சில மணி நேரம் தடைப்பட்டு இருந்தது.
சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் பொலிஸார், சம்பவ இடத்திற்கு விரைந்த போது, பொலிஸாரை கண்டதும் மோதலில் ஈடுபட்ட நபர்கள் அவ்விடத்தில் இருந்து தப்பியோடியுள்ளனர்.
சம்பவத்தில் காயமடைந்த 3 இளைஞர்கள் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.