நெருங்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்
யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தியின் நெகிழவைத்த செயல்!
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற விருது வழங்கும் நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் தங்கமுத்து சத்தியமூர்த்தி அவர்களின் செயல்பாடு நிகழ்வில் கூடியிருந்த பலரையும் நெகிழ வைத்துள்ளது.
வென்மேரி அறக்கட்டளை நிறுவனத்தினால் முதன்முறையாக யாழ்ப்பாணத்தில் தமிழ் ஆளுமைகளுக்கான விருது வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு இலங்கை வேந்தன் கலைக் கல்லூரியில் நேற்றுமுன்தினம் இடம்பெற்றது.
விருது வழங்கும் நிகழ்வில் தமிழ் மக்களுக்காக அரும் பணியாற்றிய பல்துறை சார்ந்தவர்கள் கௌரவிக்கப்பட்டார்கள்.
இவ் விழாவில் வைத்தியத்துறையின் ஆளுமைக்கான விருது யாழ்.போதனா வைத்திய சாலையின் முன்னாள் பணிப்பாளர் நந்தகுமாருக்கு வழங்குவதற்காக தற்போதைய யாழ்.போதனா வைத்திய சாலையின் பணிப்பாளர் தங்கமுத்து சத்தியமூர்த்தி மேடைக்கு அழைக்கப்பட்டிருந்தார்.
விருது பெறவிருந்த வைத்திய கலாநிதி நந்தகுமார் தனது இரண்டு வயதில் இளம்பிள்ளை வாத நோயால் பாதிக்கப்பட்டு இரு கால்களும் செயற்திறன் குன்றிய நிலையில் தனது தளராத முயற்சியினால் வைத்தியத்துறையில் சாதித்தித்திருந்தார். அதற்காகவே வைத்தியர் நந்தகுமார் ஆளுமைக்கான விருதுக்காக அழைக்கப்பட்டிருந்தார்.
எனினும் மேடையில் ஏறுவதற்கு வைத்தியர் நந்தகுமார் அசௌகரியப்பட்ட நிலையில் மேடையில் விருது வழங்குவதற்காக காத்திருந்த யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் சத்தியமூர்த்தி கீழ் இறங்கி வைத்தியர் நந்தகுமாரின் ஒரு கையை தனது தோளில் வைத்து அவரை மேடைக்கு சுமந்து வந்து தனது கையால் பொன்னாடை போர்த்தி பொற்கிளி வழங்கி விருதையும் வழங்கிக் கௌரவித்தார்.
பணிப்பாளர் த.சத்தியமூர்த்தியின் இந்த செயல் சபையில் இருந்தோரை நெகிழ வைத்துள்ளது.