விபத்திற்கு காரணமான சாரதி விடுவிப்பு: கேட்கச் சென்ற சகோதரன் கைது!
கிளிநொச்சி ஏ 35 வீதியின் பரந்தன் முரசுமோட்டை பகுதியில் பாடசாலை மாணவியை விபத்துக்கு உள்ளாக்கிய பேருந்தினையும் அதன் சாரதியினையும் தருமபுரம் பொலிசார் விடுவித்துள்ளதாக விசனம் வெளியிடப்பட்டுள்ளது.
அதேவேளை காயமடைந்த சிறுமியின் சகோதரர் உட்பட இருவரை பேருந்தை வழி மறித்து தாக்கியதாக பொலிஸார் கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று (07) காலை 7.45 மணிக்கு தனியார் வகுப்புக்கு சென்ற குறித்த மாணவி இலங்கை போக்குவரத்துச் சபையின் கிளிநொச்சி சாலைக்கு சொந்தமான பேருந்தில் ஏறிய போது மாணவி ஏறுவதற்கு முன்னர் பேருந்தை சாரதி வேகமாக எடுத்ததனால் மாணவி கீழே விழுந்து விபத்துக்கு உள்ளானார்.
இந்நிலையில் காயமடைந்த மாணவி கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
எனினும் விபத்துக்கு காரணமான பேருந்தின் சாரதி சம்பவ இடத்திலிருந்து பேருந்தினை கொண்டு சென்றதால் ஆத்திரமடைந்த மாணவின் சகோதரர் உட்பட இருவர் பேருந்தினை வழி மறித்து வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு சென்ற தருமபுரம் பொலிசார் பேருந்தினையும் விபத்தை ஏற்படுத்திய சாரதியையும் உடனடியாகவே விடுவித்துள்ளதுடன் மாறாக விபத்தை மூடி மறைக்கும் விதத்தில் பாதிக்கப்பட்ட சிறுமியின் சகோதரர் உள்ளிட்ட இருவரை கைது செய்துள்ளதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் பொலிஸாரின் இந்த செயல் மக்கள் மத்தியில் பெரும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.