விரிவுரையாளரால் தற்கொலைக்கு முயன்ற யாழ் பல்கலைகழக மாணவர்!
யாழ் பலக்லைகழகத்தில் பகிடிவதை குற்றச்சாட்டில் வகுப்புத்தடை விதிக்கப்பட்ட மாணவர் ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் குறித்த மாணவர் காப்பாற்றப்பட்டு யாழ்.தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
கடந்த மாதம் யாழ்ப்பாண பல்கலைக்கழக புதுமுக மாணவர்களை தெல்லிப்பளை பகுதிக்கு அழைத்து பகிடிவதை புரிந்ததாக குற்றம் சாட்டப்பட்ட 18 மாணவர்களுக்கு தற்காலிக வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து பகிடிவதை சம்பவம் தொடர்பில் விசாரணைகளை பல்கலைக்கழக நிர்வாகம் முன்னெடுத்து வரும் நிலையில் விசாரணைக்கு ஏதுவாக 18 மாணவர்களுக்கும் தற்காலிக வகுப்புத்தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் விரிவுரையாளர் ஒருவர் தனது விரிவுரையில், வகுப்புத்தடை விதிக்கப்பட்ட மாணவர்களின் புகைப்படங்களை காண்பித்து ” இவர்கள் தான் பல்கலைக்கழக மாபியாக்கள்” என கூறி 18 மாணவர்கள் தொடர்பிலும் தவறான தகவல்களை மாணவர்கள் மத்தியில் கூறியுள்ளார்.
இது தொடர்பில் பாதிக்கப்பட்ட மாணவர்களால் , பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு அறிவிக்கப்பட்டபோதும் நிர்வாகம் அது தொடர்பில் கரிசனை கொள்ளவில்லை என மாணவர்கள் தெரிவித்தனர்.
அத்துடன் தமது புகைப்படங்களை காண்பித்து மாணவர்கள் மத்தியில் தவறான தகவல்களை பரப்பியமை தொடர்பில் மனிதவுரிமை ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலகத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டது.