6 மணி நேரம் வரிசையில் காத்திருந்த இரண்டு முதியவர்கள் பெட்ரோல் நிலையத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
கொழும்பு: இலங்கையில் பெட்ரோல் நிரப்புவதற்காக 6 மணி நேரம் வரிசையில் காத்திருந்த இரண்டு முதியவர்கள் பெட்ரோல் நிலையத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு தொடர்ந்து குறைந்துவருவதால், உள்நாட்டு நெருக்கடி மோசமாகி வருகிறது. பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு, பால் பவுடர், மருந்துகள் வாங்குவதற்கு கூட நீண்ட வரிசை நிற்கிறது.
உள்நாட்டு போருக்குப் பின், கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து வந்த இலங்கை பொருளாதாரம், 2019ல் நடந்த குண்டுவெடிப்புக்கு பிறகு மோசமானது. அதன் பிறகு கொரோனா தாக்கத்தால், இலங்கையின் பொருளாதாரம் படுவீழ்ச்சியடைந்தது. தற்போது உக்ரைன் போரால் அது இன்னும் மோசமாகி இருக்கிறது.
சிலோன் பெட்ரோல் கார்ப்பரேஷன் நிறுவன தலைவர் சுமித் விஜேசிங்களா கூறுகையில், ” தற்போது பெட்ரோல், டீசல், விமான எரிபொருள் ஆகியவற்றை வாங்கியுள்ளோம். மேலும் ஒரு கப்பலில் டீசல் வந்துள்ளது. அவற்றை பெட்ரோல் நிலையங்களுக்கு விநியோகிக்கும் பணி தொடங்கியுள்ளது. இலங்கைக்கு 5500 மெட்ரிக் டன் டீசலும், 3300 மெட்ரிக் டன் பெட்ரோலும் தேவையாக இருந்தது. ஆனால் அது தற்போது அதிகரித்துள்ளது. பெட்ரோல், டீசலை மக்கள் வாங்கி பதுக்கி வைப்பதால் தேவை அதிகரித்துள்ளது. தற்போது இலங்கைக்கு 7000-8000 மெட்ரிக் டன் டீசலும், 4200-4500 மெட்ரிக் டன் பெட்ரோலும் வழங்கப்பட்டு வருகிறது” என தெரிவித்தார்.