போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
அம்பாந்தோட்டை துறைமுகத்தை மேம்படுத்துவதற்கான 837 மில்லியன் பவுண்ட் மதிப்பிலான ஒப்பந்தம்.
இலங்கையின் தென்பகுதியில் அமைந்திருக்கும் அம்பாந்தோட்டை துறைமுகத்தை மேம்படுத்துவதற்கான 837 மில்லியன் பவுண்ட் மதிப்பிலான ஒப்பந்தத்தில் சீனாவுடன் இலங்கை கையெழுத்திட்டுள்ளது.
இந்தத் துறைமுகத்தை சீனா தனது ராணுவத்திற்குப் பயன்படுத்தக்கூடுமோ என்ற கவலைகளின் காரணமாக இந்த ஒப்பந்தம் கையெழுத்தாவதில் தாமதம் ஏற்பட்டுவந்தது.
ஐரோப்பாவுக்கும் ஆசியாவுக்கும் இடையிலான கடல் வழியில் முக்கியமான இடத்தில் அமைந்திருக்கும் அந்தத் துறைமுகத்திலிருந்து வர்த்தக ரீதியான நடவடிக்கைகளை மட்டுமே சீனா மேற்கொள்ளும் என அரசு உறுதிமொழியளித்துள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் கிடைக்கும் பணம், வெளிநாட்டுக் கடன்களை அடைக்க உதவும் என இலங்கை அரசு கூறுகிறது.
தற்போது கையெழுத்தாகியுள்ள ஒப்பந்தத்தின்படி, சீன அரசுக்குச் சொந்தமான நிறுவனம் இந்த துறைமுகத்தை 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுத்துக்கொள்ளும். ஒரு தொழில்மண்டலத்தை உருவாக்குவதற்காக துறைமுகத்திற்கு அருகிலுள்ள 15 ஆயிரம் ஏக்கர் நிலமும் அதற்குத் தரப்படும்.
இந்தத் திட்டத்தின் காரணமாக, துறைமுகத்தைச் சுற்றியுள்ள ஆயிரக்கணக்கான கிராமங்களைச் சேர்ந்தவர்களை வெளியேற்ற வேண்டியிருக்கும். ஆனால், அவர்களுக்குப் புதிய நிலம் வழங்கப்படும் என அரசு தெரிவிக்கிறது.
இலங்கையில் 26 ஆண்டுகளாக நடந்துவந்த உள்நாட்டுப் போர் 2009ல் முடிவடைந்த பிறகு, சீனா மில்லியன் கணக்கான டாலர்களை சீனாவில் முதலீடுசெய்துவருகிறது.
சீனாவுக்கும் ஐரோப்பாவுக்கும் இடையில் உள்ள சாலைகளையும் துறைமுகங்களையும் இணைக்கும் வகையில், புதிய பட்டுப் பாதை என்று அழைக்கப்படும் புதிய வழிகளை உருவாக்கும் முயற்சியில் சீனா தற்போது ஈடுபட்டிருக்கிறது. இந்தியப் பெருங்கடலை நோக்கியபடி அமைந்திருக்கும் அம்பாந்தோட்டை துறைமுகம், சீனாவின் முயற்சியில் முக்கியப் பங்கை வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த முயற்சியை, இந்தப் பிராந்தியத்தில் சீனாவுக்குப் போட்டியாக உள்ள இந்தியா, ஜப்பான் ஆகிய நாடுகள் உற்றுக் கவனித்துவருகின்றன.
இந்தத் திட்டத்தால், இப் பகுதி சீனக் குடியிருப்பாக மாறிவிடுமோ என இந்தத் திட்டத்தை எதிர்ப்பவர்கள் அஞ்சுகிறார்கள். இந்தத் துறைமுகத்தை சீனக் கடற்படை தனது தளமாக பயன்படுத்தலாமோ என்ற அச்சமும் நிலவுகிறது.
இந்தக் கவலைகளைப் போக்கும்வகையில் புதிய ஒப்பந்தத்தை இலங்கை அரசு அறிவித்தது. அதன்படி, சீன நிறுவனத்தின் பங்கு 70 சதவீதமாகக் குறைக்கப்பட்டது. மேலும், அந்தத் துறைமுகம் சீன ராணுவத்தால் பயன்படுத்தப்படாது என்ற உத்தரவாதத்தையும் அதிகாரிகள் அளித்துள்ளனர்.
“பாதுகாப்பில் பாதிப்பின்றி, நாட்டுக்கு ஒரு புதிய ஒப்பந்தத்தை தந்திருக்கிறோம்” என பிரதமர் ரணில் விக்ரமசிங்கே வெள்ளிக்கிழமையன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இலங்கை தனது வெளிநாட்டுக் கடன்களைச் சமாளிக்க இந்த ஒப்பந்தம் உதவும் என அவர் தெரிவித்தார்.
கொழும்பு நகரில் உள்ள இலங்கை துறைமுக ஆணைய வளாகத்தில், நல்ல நேரமாகக் கருதப்படும் 10.43 மணியளவில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானதாக அங்கிருக்கும் பிபிசி செய்தியாளர் தெரிவிக்கிறார்.