உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
ஜனாதிபதியாகவுள்ள ரணில் மற்றும் சஜித் ; பிரதமர் ஹரிணி விளக்கம்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அல்லது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இந்த ஆண்டிற்குள் ஜனாதிபதியாக ஆட்சியைக் கைப்பற்றுவார்கள் என்ற வதந்திகளை இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரிய முற்றிலும் மறுத்துள்ளார்.
அரசியல் பேரணியில் உரையாற்றிய அவர், “இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக வருவார் என்று சிலர் கூறுகிறார்கள். இது இலங்கையில் நடக்குமா என எனக்கு சந்தேகம். இது வேறு எந்த உலகில் நடக்கவேண்டும்,” என்று தெரிவித்தார்.
அதேநேரம், ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹஷிம் சமீபத்தில் சஜித் பிரேமதாச இந்த ஆண்டு டிசம்பருக்குள் ஜனாதிபதியாக மாறுவார் என கூறியதையும் பிரதமர் நினைவூட்டினார். இதற்குப் பதிலளித்த பிரதமர், “இது வேறொரு பிரபஞ்சத்தில் நடக்கும் விஷயமாக இருக்கலாம்,” என பரிகாசமாக கருத்துரைத்தார்.
பிரதமர் ஹரிணி அமரசூரிய மேலும் கூறுகையில், தேசத்திற்கோ மக்களுக்கோ பயன்படாத வகையில் இவ்வாறான வதந்திகள் பரப்பப்படுவதை விமர்சித்தார்.அரசாங்கத்தை தோற்கடிக்க விரும்புபவர்கள், தற்போது ஆட்சி புரியும் அரசைக் காட்டிலும் சிறந்த முறையில் செயல்படவேண்டும் என்று ஜனாதிபதி ஏற்கனவே கூறியிருந்தார் என்றும் நினைவூட்டினார்.”நம்மை விட சிறந்தவர்களாகுங்கள், திறமையானவர்களாகுங்கள்; நடக்காத விஷயங்களைச் சொல்லாமல் செயலில் காட்டுங்கள்,” எனவும் அவர் வலியுறுத்தினார்.
இலங்கையில் தற்போதைய அரசாங்கம் தொடர்ந்து நிலைத்திருக்கப்போகிறது என்பதில் பொதுமக்கள் எந்த சந்தேகமும் கொள்ள வேண்டாம் என்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய உறுதியளித்தார்.