உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
ஜனாதிபதி தலைமையில் தேசிய போர் வீரர் நினைவு நாள்

இலங்கையின் 16ஆவது தேசிய போர் வீரர் நினைவு நாள் நிகழ்வு இன்று (திங்கட்கிழமை) ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் கோட்டை ஸ்ரீ ஜெயவர்தனபுரவில் உள்ள தேசிய போர்வீரர் நினைவு தூபியில் நடைபெறவுள்ளதாக இராணுவ வீரர் சேவை அதிகாரசபையின் தலைவர் ஓய்வு பெற்ற பிரிகேடியர் செனரத் கொஹொன தெரிவித்துள்ளார்.
நாட்டின் இறையாண்மை மற்றும் தேசிய பாதுகாப்பிற்காக தங்கள் உயிரைத் தியாகம் செய்த முப்படைகளின் வீரர்களை கௌரவிக்கும் வகையில், இந்த நினைவு நாள் நாடளாவிய ரீதியில் அனுஷ்டிக்கப்படுகிறது. மாலை 4 மணி முதல் 6 மணி வரை நடைபெறும் இந்நிகழ்வில் ஜனாதிபதியும், முப்படைகளின் தளபதியுமான அநுரகுமார திஸாநாயக்க நேரடியாக பங்கேற்கவுள்ளார்.
இந்நிகழ்வில் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, அட்மிரல் ஒப் த ஃப்ளீட் வசந்த கரன்னாகொட, மற்றும் மார்ஷல் ஒப் த எயார்போர்ஸ் ரொஷான் குணதிலக ஆகியோர் சிறப்பு அதிதிகளாக கலந்துகொள்வர்.
30 ஆண்டுகள் நீடித்த உள்நாட்டு யுத்தத்தின் போது 27,000 வீரர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் ஆயிரக்கணக்கானோர் போரில் அங்கவீனமடைந்துள்ளனர். அவர்களின் சேவையை நினைவுகூரும் வகையில் அரசு மற்றும் பாதுகாப்புத் துறைகள் இணைந்து பல்வேறு நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ளன.
நாட்டு முழுவதும் முப்படைகள், பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்புப் படையினர் மூலம் சமூக நல திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன. இது வீரவணக்கம் செலுத்தும் ஒரு சமூகப் பணியூக்கம் என அமைந்துள்ளது.
கடந்த வாரம் பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஜனாதிபதியின் பிரதிநிதியாக அமைச்சர் ஒருவர் தலைமையிலிருப்பார் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ஜனாதிபதியே நேரடியாக பங்கேற்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.