போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
கடும் அதிருப்தியில் நடிகை நக்மா
டெல்லி : மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாத நிலையில், 18 ஆண்டுகள் காத்திருப்பு ஏமாற்றம் அளிக்கிறது எனவும், எம்பி பதவிக்கு தகுதியல்லாத நபரா நான்? என மகிளா காங்கிரஸ் பொதுச் செயலாளரும், நடிகையுமான நக்மா கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழ் திரையுலகில் 90ஆம் ஆண்டுகளில் மிகப் பிரபலமாக இருந்தவர் நடிகை நக்மா. இயக்குனர் சங்கர் இயக்கத்தில் பிரபுதேவாவுடன் காதலன் படத்தில் தனது நடிப்பின் மூலம் ரசிகர்கள் மனதை அலைபாய செய்த நக்மா, தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நவரச நாயகன் கார்த்திக் என மிகப் பிரபலமானார்.
பாலிவுட்டில் பாகி – ஏ ரெபெல் ஃபார் லவ்) திரைப்படத்தில் சல்மான்கானுக்கு ஜோடியாக அறிமுகமான நக்மா, அதன்பின் இந்தி தொடங்கி தமிழ், தெலுங்கு, மலையாளம்,கன்னடம்,போஜ்புரி,பெங்காலி,பஞ்சாபி,மராத்தி என அனைத்து மொழிகளிலும் ஹிரோயினாக வலம் வந்தார்.
அடுத்தடுத்த வெற்றிப் படங்களை கொடுத்த நக்மா பின்னர் சினிமாவில் இருந்து ஒதுங்கினார். பின்னர் முழு நேர அரசியலில் ஈடுபட திட்டமிட்டிருந்த அவரை பாஜக கட்சியில் இணைக்க திட்டமிட்டது. நக்மாவை முதலில் 2004ஆம் ஆண்டில் கட்சியில் இணைய வேண்டி நக்மாவை பாரதிய ஜனதா கட்சி அணுகியதோடு, அந்த ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் ஹைதராபாத்தில் இருந்து நக்மாவை வேட்பாளராக நிறுத்த கட்சி முடிவு செய்தது.
ஆனால் அவர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். பின்னர் அகில இந்திய மகிளா காங்கிரஸ் பொதுச்செயலாளராக நடிகை நக்மா கடந்த 2018ஆம் ஆண்டில் நியமிக்கப்பட்டார். அவருக்கு தமிழகம், புதுச்சேரி ஆகிய இரு மாநிலங்களின் பொறுப்பாளர் பதவி வழங்கப்பட்டது. பின்னர் தமிழக பொறுப்பு கட்சி தலைமையால் பறிக்கப்பட்ட நிலையில், தற்போது ஜம்மு & காஷ்மீர், லடாக், மற்றும் புதுச்சேரி மாநில பொறுப்பாளராக உள்ள அவர் மாநிலங்களவை எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் நேற்றைய தினம் காங்கிரஸ் கட்சி சட்டீஸ்கர், ஹரியானா, கர்நாடகா, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களுக்கான 10 பேர் கொண்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது. இதில் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை இருப்பிடமாக கொண்டுள்ள நடிகை நக்மா பெயர் இடம்பெறவில்லை. அவருக்கு பதிலாக இம்ரான் பிரப்தகிரியை வேட்பாளராக நிறுத்த காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. இதனால் நக்மா கடும் அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளியானது.
இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளிப்படுத்தியுள்ளார் அவர்.
இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “2003-2004ம் ஆண்டில் தன்னை மாநிலங்களவையில் சேர்த்துக் கொள்வதாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி தனிப்பட்ட முறையில் தன்னிடம் உறுதி அளித்ததாகவும், ஆனால் அப்போது காங்கிரஸ் ஆட்சியில் இல்லை. இருப்பினும் 18 ஆண்டுகள் கடந்த பின்னரும் தனக்கு இப்போது வரை வாய்ப்பு வழங்கப்படவில்லை எனவும் நேற்றைய தினம் வெளியான பட்டியலில் மகாராஷ்டிரா மாநிலத்தின் மாநிலங்களவை உறுப்பினராக இம்ரான் அறிவிக்கப்பட்டுள்ளார். அவரை விட தான் தகுதி குறைந்தவரா?” என கேள்வி எழுப்பியுள்ளார். இதனிடையே அவர் பாஜகவில் இணையப் போவதாகவும் வதந்திகள் உலா வருகின்றன.