உயர்தர பரீட்சை தொடர்பில் கல்வி அமைச்சிடம் விடுத்த கோரிக்கை!
கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையை ஒத்தி வைக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவிற்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார். உயர்தரப் பரீட்சைக்கு முதல் தடவையாகவும், இரண்டாம் தடவையாகவும் மூன்றாம் தடவையாகவும் தோற்றும் மாணவர்கள் தமக்கு நாள் தோறும் இது குறித்து கோரிக்கைகளை விடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
கோவிட் காரணமாக மாணவர்களினால் நீண்ட காலம் கல்வியைத் தொடர முடியாத நிலை ஏற்பட்டிருந்தது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
2021ம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை பெறுபேறு வெளியிடப்பட்டு மூன்று மாதங்களின் பின்னர் 2022ம் ஆண்டு பரீட்சை நடாத்துவது எந்த வகையிலும் பொருத்தமானதல்ல எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மாணவர்களுக்கு போதியளவு கால அவகாசம் வழங்கப்பட வேண்டுமென விமல் வீரவன்ச கோரியுள்ளார்.
இரண்டாம்,மூன்றாம் தடவை தோற்றும் மாணவர்களுக்கு நியாயம் வழங்கும் வகையில் பரீட்சையை ஒத்தி வைக்குமாறு அவர் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.