பொலிஸாரின் செயலை பாராட்டிய பொதுமக்கள்
யாழ். இந்துக் கல்லூரிக்கு அருகாமையில் 96.000 ரூபாய் பணத்தை பேருந்தில் தொலைத்த தாயொருவரின் பணத்தொகையை யாழ் மாவட்ட பிராந்திய போக்குவரத்து பொலிஸாரால் மீட்கப்பட்டு குறித்த தாயிடம் கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் இன்றைய தினம் (22-06-2022) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
யாழிலிருந்து சுன்னாகம் நோக்கி பயணித்த பேருந்து ஒன்றில் பயணித்த 62 வயதான ராஜலட்சுமி சௌந்தர்ராஜன் என்பவர் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் இறங்கி நடந்து வந்துள்ளார்.
இந்த நிலையில்தான் வங்கியிலிருந்து மீளப்பெற்ற 96ஆயிரம் ரூபாய் பணத் தொகையை பணப் பையினுள் பார்த்த பொழுது குறித்த பணத்தொகையை காணவில்லை.
இந்நிலையில், அவ்விடத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த யாழ் மாவட்ட பிராந்திய போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரிடம் சம்பவம் தொடர்பாக அழுதவண்ணம் விடயத்தை தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து குறித்த இரு போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர்களும் குறித்த தாயாரின் தேசிய அடையாள அட்டையை வாங்கி குறித்த பேருந்தை கொக்குவில் பகுதியில் வழிமறித்து பேருந்தில் இந்த தேசிய அடையாள அட்டைக்குரியவர் பயணம் செய்துள்ளார், அவர் குறிப்பிட்ட ஒரு பணத் தொகையை இழந்துள்ளார்.
நாங்கள் முழுவதையும் சோதனையிட்டு பேருந்திலிருந்து இறக்குவோம் என தெரிவித்துள்ளனர்.
இதனிடையே பேருந்தில் ஆரம்பத்தில் எதுவித தொகையும் கீழே விழுந்திராத நிலையில் குறிப்பிட்ட சிலரை சோதனையிட்ட பின்பு பணத்தொகை ஆசனத்தின் கீழே இருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து குறித்த பணத் தொகையை எடுத்து சோதனைக் உள்ளாகிய நிலையில் 89 ஆயிரம் ரூபாய் பணம் மாத்திரமே கிடைக்கப்பெற்றது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த குறித்த தாய் தனது மகளைப் பெற்ற வங்கி படிவத்தை பொலிஸாரிடம் காட்டி 6000 ரூபாய் பணம் மட்டும்தானே காணவில்லை என தெரிவித்து குறித்த பணத்தைப் பெற்றுச் சென்றுள்ளார்.
இதனையடுத்து குறித்த பகுதியில் இருந்த பொதுமக்களால் இரு போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர்களும் பாராட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது