யாழ்ப்பாண மாணவர்களின் செயலை பாராட்டும் சமூக ஆர்வலர்கள்!

யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்ட நடைபவனியில் கலந்துகொண்ட மாணவர்களின் சூழல் நேயமிக்க செயற்பாடு தொடர்பில் சமூக ஆர்வலர்கள் பலரும் பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.
யாழ் பரியோவான் கல்லூரியின் 200ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு இன்றைய தினம் (13-03-2023) காலை யாழ் நகர்ப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட நடைபவனியில் பாடசாலை மாணவர்கள், பழைய மாணவன்கள், ஆசிரியர்கள் என 2000 ற்கும் மேற்பட்ட நபர்கள் பங்குபற்றினர்.
இந்த நடைபவனியின் போது வழங்கப்பட்ட குடிநீர் போத்தல்களை பாவனையின் பின்னர் வீதிகளில் வீசாத வகையில் யாழ் பரியோவான் கல்லூரியைச் சேர்ந்த சாரண சிறார்கள் முன்னோடியாக செயற்பட்டு, வீதி நெடுகிலும் காணப்பட்ட பிளாஸ்டிக் போத்தல்கள் மற்றும் வீசப்பட்ட ஏனைய பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்த வண்ணம் காணப்பட்டனர்.
இந்த விடயமானது சமூக ஆர்வலர்கள் மற்றும் சூழலியலாளர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றுள்ளது.